கல்வி அதிகாரியிடம் நகை பறித்த சம்பவத்தில் தொடர்பு:போலீஸ் விசாரணைக்கு பயந்து மின்வாரிய ஊழியர் தற்கொலை செய்தது அம்பலம்
நாகர்கோவிலில் கல்வி அதிகாரியிடம் நகை பறிப்பு சம்பவத்தில் தேடப்பட்ட மின்வாரிய ஊழியர் போலீஸ் விசாரணைக்கு பயந்து விஷ மாத்திரையை தின்று தற்கொலை செய்தது அம்பலமானது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் கல்வி அதிகாரியிடம் நகை பறிப்பு சம்பவத்தில் தேடப்பட்ட மின்வாரிய ஊழியர் போலீஸ் விசாரணைக்கு பயந்து விஷ மாத்திரையை தின்று தற்கொலை செய்தது அம்பலமானது.
நகை பறிப்பில் தேடப்பட்டவர்
நாகர்கோவில் நேசமணிநகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜோஸ்பின் தாமஸ் (வயது 62). கல்வி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 9-ந் தேதி அன்று காலையில் இவர் தனது வீட்டின் அருகே நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்ம ஆசாமி திடீரென ஜோஸ்பின் தாமஸ் கழுத்தில் அணிந்திருந்த 2¾ பவுன் நகையை பறித்து தப்பிச் சென்று விட்டார்.
இதுகுறித்து நேசமணிநகர் போலீசாா் வழக்குப்பதிவு செய்து மர்மஆசாமியை தேடி வந்தனர். அதே சமயத்தில் ஆசாமி பற்றி ஏதேனும் துப்பு கிடைக்கிறதா? என அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில் நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையனின் உருவம் சிக்கியது. பிறகு அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தினர்.
சீட்டு விளையாடிய போது தற்கொலை
விசாரணையில், நகை பறிப்பில் ஈடுபட்டவர் நாகர்கோவில் கட்டையன்விளை பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் சாந்தகுமார் (52) என்பது தெரிய வந்தது. அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள ஒரு கோவில் முன்பு சாந்தகுமார் மற்றும் அவரது நண்பர் பால்ராஜ் ஆகியோர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். இதனை அந்த வழியாக சென்ற போலீசார் பார்த்து சீட்டு விளையாடியவர்களை நோக்கி சென்றனர்.
உடனே சாந்தகுமார் போலீசாருக்கு பயந்து திடீரென தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த விஷ மாத்திரையை சாப்பிட்டு விட்டார். போலீசார் அதிர்ச்சி அடைந்து சாந்தகுமாரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். பிறகு சாந்தகுமாரின் தற்கொலைக்கான காரணம், அவர் வழிப்பறி திருடனாக மாறியது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது பரபரப்பு தகவல் வெளியானது.
பரபரப்பு தகவல்
அதாவது மின்வாரிய ஊழியரான சாந்தகுமாருக்கு ஏதோ பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் அடகு வைத்த மனைவியின் நகைகளையும் மீட்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சாந்தகுமாருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை உருவானது.
இதுபோன்ற பிரச்சினையை சமாளிக்க தவறான பாதையில் சம்பாதிக்கும் முடிவை சாந்தகுமார் தேர்ந்தெடுத்தார். அதன்படி ஓய்வு பெற்ற கல்வி அதிகாரியிடம் நகையை பறித்துள்ளார். இந்த நகையை விற்று பிரச்சினையை தீர்க்கலாம் என்ற முடிவில் இருந்த அவருக்கு ஒருவித பயமும் தொற்றியது. போலீசார் விசாரணை நடத்தி, நான் தான் வழிப்பறி திருடன் என கண்டுபிடித்து விட்டால் என்ன செய்வது, அவ்வாறு நேர்ந்தால் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவையும் எடுத்துள்ளார். இதற்கிடையே சாந்தகுமாரை பிடிக்க போலீசார் நெருங்கிய போது ஏற்கனவே வாங்கி வைத்திருந்த விஷ மாத்திரையை தின்று அவர் உயிரை மாய்த்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நகை பறிப்பு வழக்கில் தேடப்பட்ட மின்வாரிய ஊழியர் போலீஸ் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்த சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.