ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் கைது
ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
கட்டிட ஒப்பந்ததாரர்
திருச்சி மேல சிந்தாமணியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45). கட்டிட ஒப்பந்ததாரரான இவர், தனது நண்பர் பாலு என்பவருக்கு கம்பரசம்பேட்டை ஜெயராம் நகரில் ஒப்பந்த அடிப்படையில் வீடு கட்டி கொடுத்தார். அப்போது, அந்த வீட்டுக்கு குடியிருப்புக்கான மின் இணைப்பும் பெற்றுக்கொடுத்தார்.
தற்போது, அந்த குடியிருப்பை வணிக பயன்பாட்டுக்கு வாடகைக்கு விட பாலு எண்ணினார். இதற்காக வீட்டு மின் இணைப்பை வணிக மின் இணைப்பாக மாற்றி கொடுக்கும்படி கடந்த ஜனவரி மாதம் வெங்கடேசனிடம் கூறியுள்ளார்.
மின் இணைப்பை மாற்ற விண்ணப்பம்
அப்போதே உரிய ஆவணங்களுடன் வீட்டு மின் இணைப்பை வணிக மின் இணைப்பாக மாற்ற மின் வாரியத்துக்கு ஆன்-லைன் மூலம் வெங்கடேசன் விண்ணப்பித்தார். அத்துடன் அதற்கான கட்டணமாக ரூ.400-ம் செலுத்தினார்.
அந்த விண்ணப்பத்தை மின்வாரிய அதிகாரிகள் ஏற்றுக்கொண்டு, வீட்டு மின் இணைப்புக்கு உரிய கட்டணம் வசூலிப்பதற்கு பதிலாக, இனிமேல் வணிக பயன்பாட்டுக்கான கட்டணம் வசூலிக்க மின்வாரிய கணினியில் மாற்றம் செய்ய வேண்டும். மின் இணைப்பிலோ, மின் மீட்டரிலோ மாற்றம் செய்ய தேவையில்லை.
ரூ.15 ஆயிரம் லஞ்சம்
ஆனால், 3 மாதங்களுக்கும் மேலாக இதை செய்யாமல் மின்வாரிய அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால், தனது விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ள திருச்சி தென்னூரில் உள்ள மின்வாரிய சிந்தாமணி பிரிவு அலுவலகத்துக்கு கடந்த 17-ந் தேதி வெங்கடேசன் சென்றார்.
அப்போது, அங்கிருந்த சிந்தாமணி பிரிவு உதவி மின் பொறியாளர் ராஜேஷ், ரூ.20 ஆயிரம் கொடுத்தால் மின் இணைப்பின் கட்டண வகையை மாற்றி கொடுப்பதாக கூறியுள்ளார். வெங்கடேசன் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தவே, உங்களுக்காக ரூ.5 ஆயிரம் குறைத்துக்கொள்கிறேன். ரூ.15 ஆயிரம் கொடுங்கள். கட்டண வகையை மாற்றிக்கொடுக்கிறேன் என்று உதவி மின்பொறியாளர் ராஜேஷ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்
மின் இணைப்பின் வகையை கணினியில் மாற்றம் செய்வதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் கொடுக்க விரும்பாத வெங்கடேசன், இதுபற்றி திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் ரூ.15 ஆயிரத்துக்கு ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வெங்கடேசனிடம் கொடுத்து உதவி ெபாறியாளரிடம் ெகாடுக்கும்படி கூறினர். அதன்படி, தென்னூரில் உள்ள மின்வாரிய சிந்தாமணி பிரிவு அலுவலகத்துக்கு நேற்று காலை 11 மணிக்கு வெங்கடேசன் சென்று உதவி பொறியாளர் ராஜேஷிடம் கொடுத்தார். அப்போது அங்கு .சாதாரண உடையில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பொறி வைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர், அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், அவருடைய வீட்டுக்கும் சென்று சோதனை மேற்கொண்டனர்.
சிறையில் அடைப்பு
இதைத்தொடர்ந்து ராஜேஷ் திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ஆர்.கார்த்திகேயன் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை செய்த நீதிபதி, உதவி மின்பொறியாளர் ராஜேசை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஏற்கனவே கடந்த மாதம் 15-ந்தேதி தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் பாலக்கரை, மலைக்கோட்டை, மகாலட்சுமிநகர் உள்ளிட்ட உதவி மின்பொறியாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போதே கணக்கில் வராத ரூ.14 ஆயிரம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.