'ஷாக்' அடிக்கும் புதிய கட்டண 'பில்' மின்சார கட்டணம் மாதந்தோறும் வசூலிக்கலாமே! ஓங்கி ஒலிக்கும் பொதுமக்கள் குரல்

திய மின்சார கட்டண பில் ‘ஷாக்’ அடிக்கும் வகையில் இருப்பதாகவும், எனவே மாதந்தோறும் மின்சார கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Update: 2022-10-31 21:42 GMT

சேலம், 

தத்தளிக்கிறது

தமிழ்நாட்டில் கடந்த மாதம் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. 400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.50 என்ற வீதத்திலும், 1,000 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.11 என்ற வீதத்திலும் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி 200 யூனிட் பயன்படுத்துவோருக்கு குறைந்தபட்சமாக ரூ.55 வரையும், 900 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு அதிகபட்சமாக ரூ.1,130 வரையும் கட்டணம் உயர்ந்து இருக்கிறது.

மின்சார வாரியம் ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 226 கோடிக்கு கடனில் தத்தளிக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக மின் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. இதனால் கட்டணத்தை உயர்த்த வேண்டியது கட்டாயமாகிவிட்டது என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இருந்தாலும் மின்கட்டண உயர்வு 'ஷாக்' தருவதாக உணர்ந்து இருக்கும் பொதுமக்கள், கட்டணம் வசூலிக்கும் முறையையாவது மாற்றி அமைக்கக்கூடாதா? என்ற மனநிலைக்கு வந்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தற்போது மின்சார கட்டணம் 2 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு கட்டணம் கிடையாது. 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு கட்டண உயர்வுக்கு பிறகு ரூ.225 வசூலிக்கப்படுகிறது. 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.1,125 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மாதந்தோறும்

2 மாதங்களுக்கு ஒரு தடவை கணக்கிடும் இந்த முறைக்கு பதிலாக மாதம் ஒரு தடவை கணக்கிடும் முறையை கொண்டுவர வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது. ஏன் என்றால்? உதாரணமாக ஒருவர் இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் பயன்படுத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு மாதத்திற்கு 100 யூனிட் வரை தேவைப்படுகிறது என்பதுதானே பொருள்?

தற்போது அவர் ரூ.225 கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கிறது. மாதந்தோறும் கணக்கிடும் முறை வந்தால் அவர் கட்டணம் செலுத்த தேவை இருக்காது. ஒருவர் 2 மாதங்களுக்கு 400 யூனிட் பயன்படுத்துகிறார் என்றால் அவருக்கு மாதத்திற்கு 200 யூனிட் வரை தேவைப்படுகிறது என்பதுதானே பொருள்.

தற்போது 400 யூனிட்டுக்கு அவர் ரூ.1,125 செலுத்த வேண்டும். மாதந்தோறும் கணக்கிடும் முறை வந்தால் அவர் ரூ.225 மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதும். இதனால்தான் மாதந்தோறும் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள்.

இதுபற்றியும், மின்சார கட்டண உயர்வு பற்றியும் பல்வேறு தரப்பினர் கூறிய கருத்துகளை காண்போம்.

மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன

தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க தலைவர் என்ஜினீயர் மாரியப்பன்:- மின்சாரம் தான் சிறு மற்றும் குறுந்தொழிலுக்கு அச்சாரமாக உள்ளது. மின்சார கட்டண உயர்வால் லட்சக்கணக்கான சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சி அடைந்துள்ளன. மின்கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய கோரி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு எடுத்தோம்.

ஆனால் எங்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாக சம்பந்தப்பட்ட அமைச்சர் உறுதி அளித்ததின் பேரில் அந்த போராட்டத்தை கைவிட்டுள்ளோம். மின் கட்டணம் உயர்வால் ஏற்கனவே நலிந்துள்ள சிறு, குறு தொழில்கள் தற்போது மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. எனவே தாழ்வழுத்த மின் நுகர்வோருக்கு மின் கட்டணத்தை யூனிட்டுக்கு ரூ.6.75 பைசாவாக குறைக்க வேண்டும், விசைத்தறிகளுக்கு மின் கட்டணத்தை யூனிட்டுக்கு ரூ.4 குறைக்க வேண்டும். மேலும் மின் கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

பெரிய சுமை

இல்லத்தரசி ரமா (சூரமங்கலம்):- எனதுவீட்டுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் ரூ.400 மின்கட்டண தொகை வந்திருந்தது. தற்போது இந்த மாதம் ரூ.150 வரை அதிகரித்து ரூ.550 செலுத்த வேண்டும் என்று வந்துள்ளது. மாதந்தோறும் பட்ஜெட் போட்டு வாழ்க்கை நடத்தும் எங்களை போன்றோருக்கு இந்த மின்சார கட்டண உயர்வு மிகப்பெரிய சுமையை தலையில் ஏற்றி வைத்துள்ளது. மின் கட்டண உயர்வை கருத்தில் கொண்டு பகல் வேளையில் மின்விசிறி பயன்படுத்தாமல் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்துள்ளோம். ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால் பாதிக்கப்பட்டு வந்த நாங்கள் தற்போது மின்கட்டண உயர்வால் அவதியுற்று வருகிறோம். தி.மு.க. தேர்தல் அறிக்கை வாக்குறுதியின் படி மாதந்தோறும் மின்கட்டணத்தை வசூலிக்கும் முறையை நடைமுறைப்படுத்தவேண்டும்.

ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் ராகவேந்திரன் (கெங்கவல்லி) :- நான் ஜெராக்ஸ் மற்றும் ஜாப்டைப் தொழில் செய்து வருகிறேன். எனது கடைக்கு இதுநாள் வரையிலும் 2 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை மின் கட்டணமாக செலுத்தி வந்தேன். ஆனால் புதிய கட்டண உயர்வால் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, 100 யூனிட்டுக்கு மேல் சென்றால் ரூ.9.50 என்று பொது பயன்பாடாக மாற்றி உள்ளனர்.

எந்த கடையிலும் மாதத்துக்கு கண்டிப்பாக 100 யூனிட்டுக்கு மேல் தான் மின்சாரத்தை பயன்படுத்துவார்கள். இதனால் மின் கட்டணத்தை செலுத்துவதா? அல்லது மாத வாடகையை செலுத்துவதா?, குடும்ப செலவுகளை சமாளிப்பதா? என்று தவித்து வருகிறோம். மாதம் ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதை செய்யாமல் உள்ளார்கள். மின் கட்டணத்தை குறைப்பதுடன் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே என்னை போன்ற சிறுவணிகர்கள் உள்பட அனைவரின் கோரிக்கையாகும்.

திரும்ப பெற வேண்டும்

சமூக ஆர்வலர் நவ்சாத் அலி (தம்மம்பட்டி):- சிறு தொழில் மற்றும் விவசாயத்திற்கு பெரிதும் உதவி வருவது மின்சாரமே ஆகும். 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவது மின் நுகர்வோர்களுக்கு மகிழ்ச்சிக்குரியது. ஆனால் தற்போது அனைவராலும் 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தக்கூடிய நிலை தான் உள்ளது. நடுத்தர குடும்பத்தினர் இதுவரை மின்சார கட்டணத்துக்கு ரூ.400 செலுத்தி இருந்தவர்கள் தற்போது புதிய கட்டண உயர்வு அறிவித்த பிறகு ரூ.1,000 வரை கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.

வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் பட்டறை நடத்தி வரும் பழனியப்பன் (தாரமங்கலம்):- காலப்போக்கில் மின் சாதன எந்திரங்களை கொண்டே அனைத்து வேலைகளும் செய்ய வேண்டிய கட்டாய நிலையில் மக்கள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காலக்கட்டத்தில் விற்பனை குறைந்து பாதிப்புக்கு உள்ளாக்கியது. தற்போது வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் மூலப்பொருட்கள் விலையேற்றம் ஒரு புறம் இருக்க, தற்போது மின் கட்டண உயர்வு என்பது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இதனால் 5 ஆயிரம் ரூபாய் வரை இருந்த மின்கட்டணம் தற்போது ரூ.2 ஆயிரம் வரை கூடுதலாக... அதாவது ரூ.7 ஆயிரம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கூடுதல் செலவை சரிகட்ட நாம் விற்பனை செய்யக்கூடிய பொருட்களின் மீது சிறிய அளவிலான விலை ஏற்றம் கொண்டு வரும் போது அதன் விற்பனை பாதிக்கிறது. எனவே கூடுதல் மின் கட்டணத்தை எங்களின் வருவாய் இழப்பாகத்தான் எடுத்து கொள்ள நேரிடும்.

வசூலிக்க முடியாது

மாவு மில் நடத்தி வரும் ஹரிகரன்(பனமரத்துப்பட்டி):- மாவு மில்லுக்கு மூலதனமே மின்சாரம் தான். அரிசி, கோதுமை, வத்தல் உள்ளிட்ட பொருட்கள் அரைப்பதற்கு மக்கள் அதிகம் வருவதால் எந்திரங்கள் ஓய்வில்லாமல் ஓடி கொண்டிருக்கின்றன. கடந்த முறை வரை மின்சார கட்டணமாக ரூ.1,500 என்ற அளவில் கட்டி வந்தேன். ஆனால் தற்போது இரு மடங்கு உயர்ந்து ரூ.3 ஆயிரத்துக்கு மேல் பில் வந்துள்ளது. இதற்காக மாவு அரைப்பதற்கு வரும் மக்களிடம் கூடுதலாக வசூலிக்க முடியாது. எனவே மின் கட்டண உயர்வால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவதால் அதை திரும்ப பெறவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஓங்கி ஒலிக்கும் குரல்

அமலுக்கு வந்துள்ள மின்சார கட்டண உயர்வு மக்களுக்கு 'ஷாக்' அடிக்கும் வகையில் இருந்தாலும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற மனநிலையை மக்களிடத்தில் ஏற்படுத்தி உள்ளது. டியூப் லைட்டை பகலில் தேவை இல்லாமல் பயன்படுத்தாமல் ஆப் செய்ய வேண்டும். காற்றுக்காக மின்விசிறி பயன்பாட்டை குறைத்து வீட்டு ஜன்னல், கதவை திறந்து வைக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் தான் டி.வி. பார்க்க வேண்டும் என்று கட்டுப்பாடுகளை மக்கள் கடைபிடிக்க தொடங்கி விட்டனர். அதே நேரத்தில் தமிழக அரசு மாதந்தோறும் மின்சார கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை விரைவில் கொண்டு வரவேண்டும் என்ற குரலும் மக்கள் மத்தியில் ஓங்கி ஒலிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்