மரக்கிளைகளை வெட்டிய போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

திருவட்டாரில் மரக்கிளைகளை வெட்டிய போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-07-10 15:58 GMT

திருவட்டார்:

திருவட்டாரில் மரக்கிளைகளை வெட்டிய போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்.

இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

எலக்ட்ரீசியன்

குமரி மாவட்டம் திருவட்டார் செக்காலவிளையை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 38), எலக்ட்ரீசியன். இவர் சம்பவத்தன்று தச்சூரில் உள்ள ஒரு வீட்டில் வேலைக்கு சென்றார். அங்கு மின்சார சர்வீஸ் வயர் கட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியில் நின்ற ஒரு முறுங்கை மரத்தின் கிளைகள் இடையூறாக இருந்தது.

இதனால் மரக்கிளைகளை வெட்ட முடிவு செய்தார். இதற்காக இரும்பு ஏணியின் மீது ஏறி நின்று மரக்கிளைகளை வெட்டி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஏணி சாய்ந்து அருகில் சென்று கொண்டிருந்த மின்கம்பி மீது உரசியது.

மின்சாரம் தாக்கி சாவு

இதில் பிரகாஷ் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை அருகில் நின்றவர்கள் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பிரகாஷின் மனைவி நிஷா அளித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்