ஆத்தூரில் நள்ளிரவில் பயங்கரம்:எலக்ட்ரீசியன் வெட்டிக்கொலைமதுபோதையில் நண்பர் வெறிச்செயல்

Update: 2023-08-22 19:59 GMT

ஆத்தூர்

ஆத்தூரில் நள்ளிரவில் எலக்ட்ரீசியன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மதுபோதையில் நண்பர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார்.

எலக்ட்ரீசியன்

சேலம் மாவட்டம், ஆத்தூர் புதுப்பேட்டை தெற்கு காடு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவருடைய மகன் சந்திரன் (வயது 53), எலக்ட்ரீசியன். திருமணம் ஆகாத இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது.

தினமும் புதுப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு மதுபான கடையில் குடித்து விட்டு, அந்த பகுதியில் கீழே கிடக்கும் காலி பாட்டில்களை எடுத்து சென்று விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆத்தூர் தெற்கு காடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன், நெல் அறுவடை எந்திர டிரைவர். இவரும், சந்திரனும் நண்பர்கள் ஆவார்கள். அவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக மது அருந்தி வந்துள்ளனர். இதனிடையே நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் கடையில் மதுவாங்கி அருந்திய போது அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ரத்த வெள்ளத்தில் பிணம்

இதனிடையே நேற்று காலை புதுப்பேட்டை பாலம் பகுதியில் சந்திரன் நெற்றி மற்றும் கழுத்து பகுதிகளில் அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஆத்தூர் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன், டவுன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் முருகேசனும், சந்திரனும் ஒன்றாக மது அருந்திய போது வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே முருகேசன் வீட்டுக்கு சென்று அரிவாளை எடுத்து ெகாண்டு புதுப்பேட்டை பாலம் அருகே வந்துள்ளார். அங்கு நின்று கொண்டிருந்த சந்திரனை அவர் சரமாரியாக அரிவாளால் நெற்றி, கழுத்து பகுதிகளில் வெட்டி கொன்று விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

கைது

உடனடியாக போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு முருகேசனை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் என்ற இடத்தில் தனது உறவினர் வீட்டில் பதுங்கி இந்த முருகேசனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட முருகேசன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் மஞ்சினி ரோட்டில் புதுப்பேட்டையில் உள்ள மதுபான கடையில் சம்பவத்தன்று இரவு 10 மணி அளவில் மது வாங்கி அருந்தி கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த எனது நண்பர் சந்திரன் மது குடிக்க பணம் வேண்டும் அல்லது கொஞ்சம் மது கொடு என்று கேட்டார். அடிக்கடி இது போல கேட்கிறாயே என கூறி திட்டி அனுப்பினேன். சந்திரன் அங்கிருந்து சென்று விட்டு வேறு ஒருவருடன் மது அருந்தி விட்டு வந்து என்னை ஆபாச வார்த்தைகளால் திட்டினார்.

ஆத்திரத்தில் வெட்டினேன்

இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. உடனே வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று அரிவாளை எடுத்து வந்து புதுப்பேட்டை பாலம் அருகே நின்று கொண்டிருந்த சந்திரனை வெட்டிவிட்டு தப்பிச்சென்று விட்டேன். ஆனால் போலீசார் என்னை பிடித்து விட்டனர். இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளார்.

கொலை நடந்த 12 மணி நேரத்தில் முருகேசனை கைது செய்த தனிப்படை போலீசாரை சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் பாராட்டினார். மதுபோதையில் எலக்ட்ரீசியனை நண்பரே வெட்டிக்கொன்று வெறிச்செயலில் ஈடுபட்ட சம்பவம் ஆத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்