வாலிபரை பாட்டிலால் குத்திய வழக்கில் எலக்ட்ரீசியன் கைது
வாலிபரை பாட்டிலால் குத்திய வழக்கில் எலக்ட்ரீசியன் கைது
ஈரோடு ராசாம்பாளையம் தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் பத்ரி. இறந்துவிட்டார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுடைய மகன் பரத்ராஜ் (வயது 21). இவருடைய குடும்பத்துக்கும் ஈரோடு கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியனான அபுபக்கர் சித்திக் (46) குடும்பத்துக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஈரோடு வெட்டுக்காட்டு வலசு பஸ் நிறுத்தம் அருகில் பரத்ராஜுக்கும், அபுபக்கர் சித்திக் குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதை அறிந்த அபுபக்கர் சித்திக் அங்கு வந்து தான் வைத்திருந்த சோடா பாட்டிலை உடைத்து, பரத்ராஜின் உடலில் சரமாரியாக குத்தினார். இதில், ரத்த வெள்ளத்தில் பரத்ராஜ் மயங்கி விழுந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பரத்ராஜை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இதற்கிடையில், தப்பி சென்ற அபுபக்கர் சித்திக்கை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவரது கையிலும் பாட்டிலால் கிழித்த காயங்கள் இருந்ததால், அவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பிய அபுபக்கர் சித்திக் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.