மின் ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியாற்ற வேண்டும்

மின் ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியாற்ற வேண்டும் என்று விழிப்புணர்வு கூட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் அருணாசலம் பேசினார்.

Update: 2023-03-31 16:44 GMT

விழிப்புணர்வு கூட்டம்

வேலூர் மின்பகிர்மான வட்டம் சார்பில் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் வேலூரில் நேற்று நடந்தது. மேற்பார்வை பொறியாளர் அருணாசலம் தலைமை தாங்கினார். செயற்பொறியாளர் ஆரோக்கிய அற்புதராஜ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மேற்பார்வைபொறியாளர் பேசியதாவது:-

இந்த கூட்டம் நடத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனென்றால் பாதுகாப்பு தொடர்பாக இந்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. இதேபோன்று ஏற்கனவே பல கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. அதில் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் மாற்றம் ஏற்படாதது வருத்தமளிக்கிறது.

விபத்துகள் என்பது நடந்தவண்ணம் உள்ளது. இவை தடுக்கப்பட வேண்டும். நம் ஒவ்வொருவருக்கும் குடும்பம் உள்ளது. பணிக்கு செல்லும்போது நாம் திரும்ப வீட்டுக்கு வருவோம் என்று நமது குடும்பத்தினர் காத்துக் கொண்டிருப்பார்கள்.

உயிர் பாதுகாப்பு

எனவே உயிர் பாதுகாப்பு என்பது மிக முக்கியமானதாகும். அஜாக்கிரதையாக பணியாற்ற வேண்டாம். மிகக்கவனமுடன் பொறுமையாக பணியாற்ற வேண்டும். கையுறை, இடுப்பு கயிறு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியாற்றுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் உதவி செயற்பொறியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சண்முகம், ராஜேஷ்குமார், இளநிலை பொறியாளர்கள் உள்பட நிர்வாகிகள், மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்