மின்வாரிய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வேலூர் சேண்பாக்கத்தில் மின்வாரிய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம், வெள்ளிப்பொருட்களை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-06-12 11:50 GMT

வேலூர்

வேலூர் சேண்பாக்கத்தில் மின்வாரிய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம், வெள்ளிப்பொருட்களை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மின்வாரிய ஊழியர்

வேலூர் சேண்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 46). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

வள்ளிமலை அருகே உள்ள மேல்பாடியில் வசித்து வந்த பரமேஸ்வரியின் தந்தை கடந்த வாரம் இறந்து விட்டார். அவரின் காரிய நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி சங்கர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் மேல்பாடி கிராமத்துக்கு சென்றார். நேற்று காலை அவரின் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனை அந்த தெருவில் வசிப்பவர்கள் பார்த்து சங்கருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து அவர் உடனடியாக மேல்பாடியில் இருந்து புறப்பட்டு வீட்டிற்கு திரும்பினார்.

நகை, பணம் திருட்டு

அங்கு அறையில் துணிகள், பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 15 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் ரொக்கப்பணம், வெள்ளிப்பொருட்கள் ஆகியவை திருடு போயிருந்தது. பீரோக்களில் இருந்த கவரிங் நகைகளை மட்டும் மர்மநபர்கள் எடுக்காமல் சென்றிருந்தனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அஜந்தா மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

முதற்கட்ட விசாரணையில், சங்கர் குடும்பத்தினரின் நடவடிக்கையை நன்கு நோட்டமிட்ட அந்த பகுதியை சேர்ந்த மர்மநபர்கள் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைரேகை மாதிரியை சேகரித்தனர்.

போலீசார் வழக்குப்பதிந்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபர்களின் உருவங்கள் பதிவாகி உள்ளதா என்று ஆய்வு செய்து தப்பிச்ெசன்றவர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்