மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பலி
மோகனூர் அருகே மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பரிதாபமாக இறந்தார்.
மோகனூர்
தூய்மை பணியாளர்
மோகனூர் அருகே உள்ள ஆரியூர் ஊராட்சிக்கு உட்பட்ட நடுப்பட்டியை சேர்ந்தவர் தாமரைகண்ணன் (வயது 35). ஆரியூர் ஊராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுபாஷினி (27). இவர்களுக்கு சாய் பிரணவ் (6), லக்ஷிதா (3) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் தாமரைகண்ணன் நேற்று காலை தனது வீட்டில் மின் விசிறியின் சுவிட்சை போட்டார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தாமரைகண்ணனை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தாமரைகண்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
விசாரணை
இது குறித்து அவரது மனைவி சுபாஷினி மோகனூர் போலீசில் புகார் கொடுத்தாா். இதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு தாமரைகண்ணனின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.