அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கணவன்-மனைவி பலி

பேராவூரணி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கணவன்-மனைவி பரிதாபமாக பலியானார்கள். மரக்கிளை முறிந்து விழுந்ததில் மூதாட்டி இறந்தார்.

Update: 2023-05-02 22:12 GMT

பேராவூரணி;

பேராவூரணி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கணவன்-மனைவி பரிதாபமாக பலியானார்கள். மரக்கிளை முறிந்து விழுந்ததில் மூதாட்டி இறந்தார்.தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழைக்கு மின்கம்பி அறுந்து விழுந்ததில் அதை மிதித்த வயதான தம்பதியும், மரக்கிளை முறிந்து விழுந்ததில் மூதாட்டியும் பலியானார்கள்.இதுகுறித்த விவரம் வருமாறு:-

கூலி தொழிலாளர்கள்

தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்த காலகம் ஊராட்சி மிதியக்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் உடையப்பன்(வயது 70) இவரது மனைவி சம்பூரணம்(62). இவர்கள் குடிசை வீட்டில் வசித்து வந்தனர்.கணவன்-மனைவி இருவரும் அவ்வப்போது கிடைக்கும் கூலி வேலைக்கும், 100 நாள் வேலை திட்டத்திற்கும் சென்று வந்தனர். பேராவூரணி பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வந்தது.

மின்கம்பியை மிதித்து கணவன்-மனைவி பலி

இந்த மழைக்கு வீட்டு வாசலில் சென்ற மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. நேற்று அதிகாலை 3 மணி அளவில் இயற்கை உபாதையை கழிக்க உடையப்பன் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது இருளில் அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் தவறுதலாக அதை மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி அந்த இடத்திலேயே உடையப்பன் பலியானார்.வீட்டை விட்டு வெளியில் சென்ற கணவரின் அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் தூங்கிக்கொண்டு இருந்த சம்பூரணம் வெளியில் ஓடி வந்து கீழே விழுந்து கிடந்த கணவரை தூக்குவதற்காக வந்துள்ளார். அப்போது அவரும் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவரும் மின்சாரம் தாக்கி பலியானார்.

சோகத்தில் ஆழ்த்தியது

இருவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தபோது மின்கம்பி அறுந்து கிடந்தது தெரிய வந்தது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட கிராம மக்கள் இதுகுறித்து மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பை துண்டித்தனர். இதுகுறித்து பேராவூரணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்து பேராவூரணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்சாரம் தாக்கி பலியான கணவன்-மனைவி இருவருடைய உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி பலியான சம்பவத்தால் அந்த கிராமமே மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.

அறுந்து விழும் நிலையில் மின்கம்பிகள்

இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த உடையப்பனின் உறவினரான காந்தி என்ற பெண்மணி கூறுகையில், மிதியக்குடிக்காடு கிராமம் முழுவதும் மின் கம்பிகள் பழுதடைந்து எந்த நேரமும் அறுந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. குழந்தைகளை வைத்துக் கொண்டு ஆபத்தான நிலையில் உயிர் வாழ்கிறோம். உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பிகளை சரி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

மரக்கிளை விழுந்து மூதாட்டி சாவு

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 9 மணியில் இருந்து இடி மின்னலுடன் நேற்று காலை வரை பட்டுக்கோட்டையில் தொடர்ந்து மழை பெய்தது.பட்டுக்கோட்டை அருகே உள்ள கழுகப்புளிக்காடு பகுதியை சேர்ந்தவர் காசி தேவர். இவருடைய மனைவி தெய்வானை(70). இவர், நேற்று காலை பால் வாங்குவதற்காக நடந்து சென்றாா். பாலத்தளி மெயின் ரோடு பகுதியில் சென்ற போது சாலையோரத்தில் இருந்த மாமரத்தின் கிளை எதிர்பாராத விதமாக முறிந்து தெய்வானை மீது விழுந்தது.இதில் தலையில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தெய்வானை பரிதாபமாக உயிரிழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்