உயர்மின் கோபுர திட்டப்பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்

கோர்ட்டில் வழக்குகள் முடியும் வரை உயர்மின் கோபுர திட்டப்பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

Update: 2022-06-25 17:01 GMT

கோர்ட்டில் வழக்குகள் முடியும் வரை உயர்மின் கோபுர திட்டப்பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

உயர்மின் கோபுர திட்ட பணிகள்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ஈசன் தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் விருதுநகர் முதல் திருப்பூர் வரை 765 கிலோ வாட் உயர்மின் கோபுரம் திட்டப்பணிகளை காவல்துறையை வைத்து மிரட்டியும், வருவாய்த்துறையை வைத்து அச்சுறுத்தியும் பணிகளை செய்து வருகிறது. 2 நாட்களுக்கு முன் காங்கயம் தாலுகா படியூர் கிராமத்தில் முன்நுழைவு அனுமதி இல்லாமல் விவசாய நிலங்களுக்குள் தங்களது உத்தரவின் பேரில் காவல்துறை, வருவாய்த்துறையினர் இணைந்து சட்டவிரோதமாக நில அளவை செய்துள்ளனர்.

இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. உடனடியாக நில அளவை பணி உள்ளிட்ட அனைத்து திட்ட பணிகளையும், வழக்குகள் முடியும் வரை நிறுத்திவைக்க வேண்டும்.

தேங்காய் தொட்டி கரி சுடும் ஆலை

உடுமலை அருகே பெரியபட்டி, தாராபுரம் அருகே சின்னமருதூர் பகுதியில் தமிழ்நாடு அரசு அலுவலக கட்டுப்பாட்டு வாரியத்தால் தடை செய்யப்பட்ட தொழில்நுட்பத்தில், தேங்காய் தொட்டி கரி சுடும் ஆலை செயல்பட்டு காற்று, நீர் மாசுபட்டு வருகிறது. விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. தெற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளால் 3 முறை சீல் வைக்கப்பட்டும் சீல் உடைக்கப்பட்டு இயங்கி வருகிறது. சட்டவிரோதமாக ஆலைகள் இயக்கம் அதிகரித்துள்ளன. ஆலைகளை இடித்து அகற்ற கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. ஆனால் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் துணையுடன் இந்த ஆலைகள் செயல்படுகிறது. இந்த தேங்காய் தொட்டி கரி சுடும் ஆலைகளை உடனே மூட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

உயர்மின் கோபுர திட்டப்பணிகளை நிறுத்தி வைக்கக்கோரி விவசாயிகள் எழுந்து நின்று தங்கள் கோரிக்கையை கலெக்டரிடம் தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்