வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணி

திருவாரூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகளை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆபிரகாம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-11-20 18:45 GMT

திருவாரூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகளை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆபிரகாம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆலோசனை கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சிறப்பு செயலாளரும், வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான ஆபிரகாம் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

அப்போது வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆபிரகாம் கூறியதாவது:-

8-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான சிறப்பு சுருக்க திருத்த முகாமானது ஆண்டுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த முகாம்களில் உள்ள சந்தேகங்கள், சிரமங்களை அரசியல் கட்சி பிரதிநிதிகள் தெரிவிக்கவே இக்கூட்டமானது நடத்தப்படுகிறது.

18 வயது நிறைவடைந்து இதுநாள் வரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்களும், வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி அன்று 18 வயது நிறைவடைய உள்ளவர்களும் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு அடுத்த மாதம் 8-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ஆய்வு

வருகிற 26 மற்றும் 27 ஆகிய 2 நாட்களில் சிறப்பு முகாம் நடைபெறும் இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து திருவாரூர் தண்டலை ஊராட்சியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்கள் வழங்கியவர்களின் வீடுகளுக்கே வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆபிரகாம் நேரில் சென்று கள ஆய்வு செய்தார். அப்போது உதவி கலெக்டர் சங்கீதா உடனிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்