கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கான சிறப்பு முகாம் கலெக்டர் ஷ்ரவன்குமார் நேரில் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கான சிறப்பு முகாமை கலெக்டர் ஷ்ரவன்குமார் நேரில் ஆய்வு செய்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. அதன்படி, கள்ளக்குறிச்சி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடந்த சிறப்பு முகாமை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க எத்தனை பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர், திருத்தம் போன்ற இதர பணிகளுக்காக பெறப்பட்ட மனுக்கள் குறித்தும் அங்கிருந்த அலுவலர்களிடம் அவர் கேட்டறிந்தார்.
இதன் பின்னர் கலெக்டர் ஷ்ரவன் குமார் கூறுகையில், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் 1.1.2023-ந்தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க திருத்தப்பணி வருகிற 8-ந்தேதி வரைக்கும் மேற்கொள்ளப்படுகிறது. இதில் நேற்று 2-வது நாளாக சிறப்பு முகாம்கள் அந்தந்த பகுதி வாக்குச்சாவடிகளில் நடத்தப்பட்டது. தொடர்ந்து, வருகிற 26 மற்றும் 27-ந்தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதில் பெயர் சேர்த்தல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இந்த முகாம்களை வாக்காளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார். ஆய்வின் போது கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா, கள்ளக்குறிச்சி தாசில்தார் சத்யநாராயணன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.