Elections soon for 6 wards Notice of Collector Arvind கலெக்டர் அரவிந்த் அறிவிப்பு
குமரி மாவட்டத்தில் ஒன்றிய, பஞ்சாயத்துகளின் 6 வார்டுகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது என கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் ஒன்றிய, பஞ்சாயத்துகளின் 6 வார்டுகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது என கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எந்தெந்த வார்டுகள்?
ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு காரணங்களினால் கடந்த 30-4-2022 வரை ஏற்பட்ட காலி பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்திட தமிழக மாநில தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் காலியாக உள்ள கீழ்க்காணும் 2 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் மற்றும் 4 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு தற்செயல் தேர்தல்கள் நடைபெற உள்ளன. அதன் விவரம் வருமாறு:-
ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய 10-வது வார்டு (தர்மபுரம் பஞ்சாயத்து பகுதி), குருந்தங்கோடு ஒன்றியம் 7-வது வார்டு (கக்கோட்டுதலை, தலக்குளம் பஞ்சாயத்து பகுதிகள்), ராஜாக்கமங்கலம் ஒன்றியம் பள்ளம்துறை பஞ்சாயத்து 9-வது வார்டு, தக்கலை ஒன்றியம் மருதூர்குறிச்சி பஞ்சாயத்து 5-வது வார்டு, திருவட்டார் ஒன்றியம் கண்ணனூர் பஞ்சாயத்து 4-வது வார்டு, காட்டாத்துறை பஞ்சாயத்து 5-வது வார்டு ஆகியவற்றுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
வாக்காளர் பட்டியல்
இந்த தற்செயல் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் ஒன்றிய வார்டு கவுன்சிலர் மற்றும் கிராம பஞ்சாயத்து வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியல்கள் அண்மையில் வெளியிடப்பட்ட சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தயார் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அலுவலகம், ஒன்றிய அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலக வளர்ச்சிப்பிரிவு ஆகியவற்றில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.