பள்ளி மேலாண்மை குழு தேர்தல்

பெத்தநாயக்கனூர் அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பிற்கான தேர்தல் நடந்தது. இதில் வாக்கெடுப்பு மூலம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

Update: 2022-07-10 16:37 GMT

பொள்ளாச்சி, 

பெத்தநாயக்கனூர் அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பிற்கான தேர்தல் நடந்தது. இதில் வாக்கெடுப்பு மூலம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

பள்ளி மேலாண்மை குழு

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்த மேலாண்மை குழுவை புத்துயிர் பெற செய்யும் வகையில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பிற்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. இந்தநிலையில் நேற்று உயர்நிலை, மேல்நிலை பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பிற்கான கூட்டம் மற்றும் தேர்தல் நடைபெற்றது.

தமிழக அரசின் நெறிமுறைகளின் படி ஆனைமலை அருகே பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலை பள்ளியில் தேர்தல் நடந்தது. பள்ளியின் வளர்ச்சி மற்றும் மேலாண்மை குழுவின் உறுப்பினர்கள் மற்றும் தலைவரின் பொறுப்புகள் குறித்து தமிழ் ஆசிரியர் பாலமுருகன் பேசினார். பள்ளி தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி தேர்தலை நடத்தினார். முதலில் 9, 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பெற்றோர்களை உறுப்பினர்களாக தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

உறுப்பினர்கள் தேர்வு

பின்னர் 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்களை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு நடந்தது. இதில் தேர்வான உறுப்பினர்கள் சேர்ந்து, பள்ளி மேலாண்மை குழு தலைவராக ஸ்ரீதேவியை தேர்ந்தெடுத்தனர். இதையடுத்து துணைத்தலைவர் தேர்தலில் மாற்றுத்திறனாளி குழந்தையின் தந்தை தேர்வு செய்யப்பட்டார்.

ஊராட்சி மன்றத்தில் இருந்து தீர்மானம் மூலம் 2 வார்டு உறுப்பினர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி பொறுப்பாளார் கல்வியாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் குறிப்பாக பெண்கள் 85 சதவீதம் தேர்வு செய்யப்பட்டனர். குழு உறுப்பினர்களுக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது. முடிவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் லோகநாதன் நன்றி கூறினார். இதேபோல் பிற உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலும் தேர்தல் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்