மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தல்

தேனியில் 7 பதவிகளுக்கான மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தல் நடந்தது. அதில் தி.மு.க. 6 பதவிகளையும், காங்கிரஸ் ஒரு பதவியையும் கைப்பற்றியது

Update: 2023-06-23 19:15 GMT

மாவட்ட திட்டமிடும் குழு

தேனி மாவட்ட திட்டமிடும் குழுவுக்கு மொத்தம் 12 உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு ஊரக பகுதியில் இருந்து 5 உறுப்பினர்கள், நகர பகுதியில் இருந்து 7 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஊரக பகுதிக்கு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களில் இருந்தும், நகர பகுதிக்கு நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்களில் இருந்தும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர்கள். இதற்காக வேட்பு மனு தாக்கல் கடந்த 7-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை நடந்தது.

ஊரக பகுதிக்கு 5 பேரும், நகர பகுதிக்கு 57 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நகர பகுதிக்கு தாக்கல் செய்தவர்களில் 21 பேர் மனுவை வாபஸ் பெற்றனர். ஊரக பகுதிக்கு 5 பதவிகளுக்கு 5 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்ததால் அவர்கள் 5 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

வாக்குப்பதிவு

நகர பகுதிக்கான 7 உறுப்பினர்கள் பதவிக்கு 36 பேர் களத்தில் இருந்தனர். இதையடுத்து மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. காலை 10 மணியில் இருந்தே வாக்குப்பதிவு செய்வதற்கு நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் வரத் தொடங்கினர். அவர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பலத்த பாதுகாப்புடன் இந்த தேர்தல் நடந்தது. பகல் 3 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.

176 நகராட்சி கவுன்சிலர்களில் 174 பேர் வாக்களித்தனர். 2 பேர் வாக்களிக்க வரவில்லை. 335 பேரூராட்சி கவுன்சிலர்களில் 322 பேர் வாக்களித்தனர். 13 பேர் வாக்களிக்க வரவில்லை. மொத்தம் 511 வாக்குகளில் 496 வாக்குகள் பதிவாகின,

வாக்குப்பதிவு முடிந்ததை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை இரவு வரை நடந்தது.

தி.மு.க., காங்கிரஸ் வெற்றி

இதில் 16 பேரின் வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிவில், தி.மு.க. வேட்பாளர்கள் 6 பேர், காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் ஆகியோர் வெற்றி பெற்றனர். அ.தி.மு.க., ஓ.பன்னீர்செல்வம் அணி, பா.ஜ.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டவர்கள் தோல்வியை தழுவினர்.

அதன்படி, தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தேனி அல்லிநகரம் நகராட்சி 19-வது வார்டு கவுன்சிலர் நாராயணபாண்டியன், கூடலூர் நகராட்சி 21-வது வார்டு கவுன்சிலர் தினகரன், சின்னமனூர் நகராட்சி 27-வது வார்டு கவுன்சிலர் ராஜீவ், போடி நகராட்சி 18-வது வார்டு கவுன்சிலர் ஜெயந்தி, பழனிசெட்டிபட்டி பேரூராட்சி 15-வது வார்டு கவுன்சிலர் பவானி, கோம்பை பேரூராட்சி 15-வது வார்டு கவுன்சிலர் தங்கராஜ், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சின்னமனூர் நகராட்சி 3-வது வார்டு கவுன்சிலர் நயினார் முகமது ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி வழங்கினார். அப்போது சரவணக்குமார் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்