மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் தேர்தல் 3-வது முறையாக ஒத்திவைப்பு
தி.மு.க.- அ.தி.மு.க. கவுன்சிலர்கள் யாரும் வராததால் கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் மறைமுக தேர்தல் 3-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல்
கரூர் மாவட்டத்தில் 2019-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த 9 பேரும், தி.மு.க.வை சேர்ந்த 3 பேரும் வெற்றி பெற்றனர். இதனையடுத்து மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த கண்ணதாசனும், துணைத்தலைவராக முத்துக்குமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக துணைத்தலைவராக இருந்த முத்துக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். சட்டமன்ற தேர்தலில் முத்துக்குமார் தோல்வி அடைந்தார். இந்நிலையில் பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட காலியிடங்கள் மற்றும் நிரப்பப்படாத பதவியிடங்களுக்கான ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
மறைமுக தேர்தல்
இதில் தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், வார்டு எண் 8-க்கான மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் மீண்டும் முத்துக்குமாரும், தி.மு.க. சார்பில் கண்ணையனும் போட்டியிட்டனர். இதில் தி.மு.க.வை சேர்ந்த கண்ணையன் வெற்றிபெற்றார். இதனையடுத்து மாவட்ட ஊராட்சியில் அ.தி.மு.க.வின் எண்ணிக்கை 9-ல் இருந்து 8-ஆக குறைந்தும், தி.மு.க.வின் எண்ணிக்கை 3-ல் இருந்து 4-ஆக அதிகரித்தும் இருந்தன. இந்நிலையில் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பதவிக்கு கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந் தேதி மறைமுக தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அப்போது 12 மாவட்ட கவுன்சிலர்களும் வந்திருந்தனர். இந்நிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரி தேர்தலை ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதனால் அதிகாரியின் காரை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டதால், அ.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர்கள் 2 பேர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர். இதனால் தி.மு.க.வின் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எண்ணிக்கை 4-ல் இருந்து 6-ஆக உயர்ந்தது. அ.தி.மு.க.வின் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எண்ணிக்கை 8-ல் இருந்து 6-ஆக குறைந்தது. இதனால் தி.மு.க.- அ.தி.மு.க. சம பலத்துடன் இருந்தனர்.
தேர்தல் ஒத்திவைப்பு
இந்நிலையில் 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க.- அ.தி.மு.க. கவுன்சிலர்கள் யாரும் வராததால், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மீண்டும் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் மதியம் 2.30 மணிக்கு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தி.மு.க.- அ.தி.மு.க. சமபலத்துடன் இருந்ததால் துணைத்தலைவர் பதவியை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இதனால் மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான பிரபுசங்கர் தேர்தல் நடைபெறும் அலுவலகத்தில் தயாராக இருந்தார். இந்நிலையில் தி.மு.க.-அ.தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர்கள் யாரும் மறைமுக தேர்தலுக்கு வரவில்லை. மதியம் 3 மணி வரை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் காத்திருந்தனர். பின்னர் மாவட்ட கவுன்சிலர்கள் யாரும் வராததால், மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான பிரபுசங்கர் அறிவித்தார். இதனால் 3-வது முறையாக மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.