தமிழக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், தமிழக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2023-04-01 18:45 GMT

கூடலூர், 

கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், தமிழக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சட்டமன்ற தேர்தல்

கர்நாடகா மாநிலத்தில் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. தொடர்ந்து 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தேர்தல் பிரசாரமும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இதேபோல் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வெளி மாநிலங்களில் இருந்து கர்நாடகாவுக்கு வரும் வாகனங்களை மாநில எல்லைகளில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் மற்றும் கர்நாடகா எல்லையான கக்கநல்லாவில் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

போலீசார் அறிவுரை

மேலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் மற்றும் பொருட்கள் எடுத்து வரக்கூடாது என வாகன டிரைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். இந்த உத்தரவை மீறினால் பணம் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்து உள்ளனர். இதுகுறித்து கர்நாடகா போலீசார் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் கர்நாடகா உள்பட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் கேரளாவில் இருந்து கூடலூர் வழியாக கர்நாடகாவுக்கு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதற்காக சரக்கு லாரிகள் அதிகமாக வருகிறது. அவ்வாறு வரும்போது ஆவணங்கள் இல்லாமல் பணம் மற்றும் பொருட்கள் எடுத்து வரக்கூடாது. இதை மீறினால் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்