14 முதியோர்களுக்கு தேர்தல் ஆணைய பாராட்டு கடிதம்

தவறாமல் வாக்களித்த 14 முதியோர்களுக்கு இந்திய தேர்தல் ஆணைய பாராட்டு கடிதத்தினை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

Update: 2022-10-01 18:45 GMT

ஊட்டி, 

தவறாமல் வாக்களித்த 14 முதியோர்களுக்கு இந்திய தேர்தல் ஆணைய பாராட்டு கடிதத்தினை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

முதியோர் தின விழா

நீலகிரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், சர்வதேச முதியோர் தின விழா ஊட்டி பிங்கர்போஸ்டில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி, இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக 14 முதியோர்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையரின் கடிதத்தினை வழங்கினார்.

விழாவில் கலெக்டர் அம்ரித் பேசியதாவது:-

40 ஆண்டுகளுக்கு முன்பு அனைவரும் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர். தற்போதைய காலகட்டத்தில் குடும்ப உறுப்பினர்கள், தொழில் முறையாக பல்வேறு இடங்களுக்கு சென்று விட்டனர். முதியோர்களின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும், நலனையும் காப்பது நமது கடமை. இது ஒவ்வொருவருடைய கடமை என்பதை இளைஞர்கள் மனதில் வைத்துகொள்ள வேண்டும். மேலும் மீட்பு, நிவாரண பணி, சட்டரீதியான உதவி, மனநல ஆலோசனை போன்றவற்றுக்கு 14567 என்ற கட்டணமில்லா முதியோர் உதவி எண்ணை தொடர்புகொண்டு பயன் பெறலாம்.

ஜனநாயக கடமை

நாட்டின் தேர்தல் செயல்பாடுகளில் உங்களது தொடர்ச்சியான பங்களிப்பிற்கு நன்றி தெரிவிப்பது தேர்தல் ஆணையத்திற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் நாட்டின் இளைஞர்களுக்கு முன் உதாரணமாக திகழ்வதுடன், இந்திய ஜனநாயகத்தை வலுபடுத்துகிறீர்கள். எனவே, வாக்காளர்களாக 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களாக உங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளீர்கள். இதனை பாராட்டி கடிதம் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த செயல் இளம் தலைமுறையினருக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும், ஊக்கமளிக்கும் விதமாகவும் இருக்கும். இதற்காக எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி, மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணாதேவி, தாசில்தார் ராஜசேகர், தேர்தல் தாசில்தார் புஷ்பாதேவி, முதியோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்