கோவை மாநகராட்சி தேர்தலை ரத்து செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது - சென்னை ஐகோர்ட்டு

கோவை மாநகராட்சி தேர்தலை ரத்து செய்யும்படி மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.

Update: 2023-07-15 13:11 GMT

சென்னை,

கோவை மாநகராட்சிக்கு கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்ததால் இதனை ரத்து செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் கடந்த ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில் அரசியல் குதிரை பேரத்தில் லாபம் அடைய வேண்டும் என்ற உள்நோக்கத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை லஞ்சமாக கொடுத்து முறைகேடுகளில் ஈடுபட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அதுகுறித்த தகவல் கிடைத்ததும் நேரடியாக ஆய்வு செய்து பணத்தை பறிமுதல் செய்ததாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மாநகராட்சி தேர்தல் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட நிலையில் தேர்தல் முறைகேடுகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்பதற்காக அத்தனை வேட்பாளர்களும் முறைகேடுகளில் ஈடுபட்டு இருப்பார்கள் என்று கூற முடியாது என்றும் சொல்லி, மாநகராட்சி தேர்தலை ரத்து செய்ய முடியாது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

மேலும் ஊழல் நடவடிக்கைகள் மூலம் வெற்றி பெற்றவர்களுக்கு எதிராக தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதற்கு வாக்காளர்களுக்கு உரிமை உள்ளதாகவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்