வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்கி விட்டு தேர்தல் நடத்தப்படும்

கூட்டுறவு சங்க வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்கி விட்டு தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் பேட்டி

Update: 2023-04-30 18:45 GMT

சிவகங்கை

கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் சிவகங்கையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கூட்டுறவு சங்க தேர்தலை சீராக ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்பதே நோக்கம். வாக்காளர்கள் பட்டியலில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்தவர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்கி தேர்தல் நடத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதனை எடுத்து கூறியதற்கு பின்பே இந்த 6 மாத கால அவகாசத்தை நீதிமன்றம் வழங்கியுள்ளது. தற்போது வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை சரி செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 4500 கூட்டுறவு சங்கங்களில் கடந்த இரு ஆண்டுகளில் 2500 கூட்டுறவு சங்கங்கள் லாபத்தில் இயங்கி வருகிறது, சில சங்கங்கள் லாபம் குறைவாகவும், ஒரு சில சங்கங்கள் நஷ்டத்திலும் உள்ளது. கூட்டுறவு சங்கங்களில் வெறும் சேவை மையமாக மட்டும் இல்லாமல் பல்நோக்கு சேவை மையமாக அவற்றை மாற்ற வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

பெரிய அளவில் உள்ள கூட்டுறவு சங்கங்களை தேவைக்கேற்ப பிரித்துக்கொள்ளலாம். .லாபத்தில் இயங்கும் பெரிய அளவிலான கூட்டுறவு சங்கங்களை பிரித்தால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. உள்ளாட்சி முதல் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது சொத்து மதிப்பை வெளியிட்டுள்ளனர். இதில் அண்ணாமலை ஏதோ ஆய்வு செய்து வெளியிட்டுள்ளார் என்பது போல் சித்தரிப்பது ஏற்புடையதல்ல. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்