சீர்காழி: திருடனுக்கு பயந்து பீரோவிற்கு மின் இணைப்பு - மறந்துபோய் திறந்த மூதாட்டி மின்சாரம் தாக்கி பலி

சீர்காழியில் மின் இணைப்பை மறந்து பீரோவை திறந்தபோது மின்சாரம் தாக்கியதில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-08-27 08:56 GMT

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவை சேர்ந்தவர் அன்பழகி (வயது 68). இவர் சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். தற்பொழுது இவர் தனியாக ஈசானிய தெருவில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் இவர் வீட்டில் அடிக்கடி பொருள்கள் திருட்டு போவதாகவும் இதனை தடுக்கும் வகையில் வீட்டில் உள்ள ஒரு மின் போர்டில் இருந்து மின் ஒயரை எடுத்து பீரோ மற்றும் கதவிற்கு சட்ட விரோதமாக மின் இணைப்பு கொடுத்துள்ளார். இந்நிலையில் இன்று காலை எதிர்பாராமல் அன்பழகியே மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

அப்பொழுது இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. இது குறித்து இவரது சகோதரர் மாயவன் (50) என்பவர் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் அடிப்படையில் சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த அன்பழகி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்