மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கடைவீதியில் நேற்று மாலை கடலூர் மாவட்டம், சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து பாப்பாக்குடி, மீன்சுருட்டி வழியாக கும்பகோணம் செல்லும் பஸ் வந்தது. மீன்சுருட்டி கடைவீதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்ற அந்த பஸ்சில் இருந்து பயணிகள் இறங்கி, ஏறிக்கொண்டிருந்தனர். பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் புறப்பட்டபோது, அந்த வழியாக சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது பஸ் மோதியது. இதில் கீழே விழுந்த மூதாட்டி பஸ்சின் முன் பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் மீன்சுருட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பக்கிரியின் மனைவி சாரதாம்பாள்(வயது 65) என்பது தெரிய வந்தது. இதையெடுத்து சாரதாம்பாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தனியார் பஸ் டிரைவர் காட்டு மன்னார்குடி தாலுகா எய்யலூர் குச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்த கல்யாண சுந்தரம்(46) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.