தூத்துக்குடியில் முதியவர் சரமாரி வெட்டிக் கொலை
தூத்துக்குடியில் குடும்ப தகராறில் முதியவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த அண்ணன்-தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் குடும்ப தகராறில் முதியவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த அண்ணன்-தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
குடும்ப தகராறு
தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவநாயகர் காலனியைச் சேர்ந்தவர் முனியசாமி (வயது 65), கூலி தொழிலாளி. இவருடைய மகன்வழி பேத்தி முத்துமாலைக்கும், தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் மாரி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
பின்னர் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை முனியசாமி தட்டி கேட்டதால், அவருக்கும், மாரி குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.
பேத்தியை அழைக்க சென்றபோது...
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு முத்துமாலைக்கு மருத்துவமனையில் குழந்தை பிறந்து இறந்தது. இதையடுத்து பேத்தி முத்துமாலையை தனது வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக முனியசாமி நேற்று முன்தினம் இரவில் மாரியின் வீட்டிற்கு சென்றார். அப்போது மாரி வீட்டில் இல்லை. அவர், கடலில் மீன்பிடிக்க சென்றிருந்தார்.
அப்போது அங்கிருந்த மாரியின் அண்ணன் கருப்பசாமி என்ற சின்னத்தம்பி, அவருடைய இளைய தம்பி மற்றும் நண்பரான திரேஸ்புரத்தைச் சேர்ந்த முத்து மகன் ஓட்டை என்ற கருப்பசாமி (20) ஆகிய 3 பேருக்கும், முனியசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வெட்டிக்கொலை
இதில் ஆத்திரம் அடைந்த சின்னத்தம்பி உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து முனியசாமியை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த முனியசாமி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ், வடபாகம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தனபால், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இறந்த முனியசாமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
3 பேர் கைது
தப்பிச் சென்ற சின்னத்தம்பி, கருப்பசாமி உள்ளிட்ட 3 பேரையும் வடபாகம் போலீசார் நேற்று கைது செய்தனர். தூத்துக்குடியில் குடும்ப தகராறில் முதியவரை அண்ணன்-தம்பி உள்ளிட்ட 3 பேர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.