பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு
குத்தாலத்தில் பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு
குத்தாலம்:
குத்தாலம் பகுதியில் சம்பவத்தன்று ஒரு தனியார் பஸ் ஆடுதுறையில் இருந்து குத்தாலம் மார்க்கமாக மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் படிக்கட்டிற்கு அருகில் உள்ள இருக்கையில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அமர்ந்து பயணம் செய்துள்ளார். அந்த பஸ் குத்தாலம் பஸ் நிறுத்தம் நெருங்கிய நிலையில் கீழே இறங்குவதற்காக இருக்கையில் இருந்து முதியவர் எழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிராமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.