திருமானூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூர் அருகே திருமானூர் சாலை பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உடல் நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள், அதைக்கண்டு கீழப்பழுவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் அந்த முதியவர் உயிரிழந்தது தெரியவந்தது. ேமலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்தும், அவர் மீது மோதிய வாகனம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.