குண்டர் சட்டத்தில் முதியவர் கைது
கன்னிவாடி அருகே கஞ்சா விற்ற வழக்கில் கைதாக முதியவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
கன்னிவாடி அருகே உள்ள டி.புதுப்பட்டி சந்தமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தனபாண்டி (வயது 62). கடந்த மாதம் 19-ந்தேதி கன்னிவாடி பகுதியில் கஞ்சா விற்றதாக போலீசார் இவரை கைது செய்தனர். மேலும் இவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் தனபாண்டி மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய அனுமதிக்கும்படி மாவட்ட கலெக்டர் விசாகனுக்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பரிந்துரை செய்தார். அதன் பேரில் தனபாண்டியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.