சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா தீவிர சிகிச்சை பிரிவு வார்டு தயார் நிலையில் உள்ளது.
கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்திலும் கொரோனாவுக்கு தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெறுகின்றனர். பலர் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெறுகின்றனர்.
இந்த நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கைகள் வசதிகள், ஆக்சிஜன் சப்ளை செய்யும் வசதிகள் உள்ளிட்டவைகளை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்டப்பட்டுள்ளது.
100 படுக்கைகள்
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 100 படுக்கைகள் வசதி கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு வார்டு தயார் நிலையில் உள்ளது. அங்கு படுக்கைகள் மற்றும் அறைகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் மணி கூறும் போது, 'சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 100 படுக்கை வசதி கொண்ட கொரோனா தீவிர சிகிச்சை பிரிவு வார்டு தயாராக உள்ளது.
மேலும் ஆக்சிஜன் வசதி, மருந்து, மாத்திரைகள் உள்ளிட்டவை போதிய அளவில் உள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரே நேரத்தில் அதிகம் பேர் வந்தால் அவர்களுக்கு எப்படி அழைத்து சென்று சிகிச்சை அளிப்பது? என்பது குறித்து டாக்டர்கள், நர்சுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன என்றார்.