எழுமூர் பெரிய ஏரியை தூர்வார வேண்டும்

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த எழுமூர் பெரிய ஏரியை தூர்வாரி பாசன வாய்க்கால்களையும் சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2022-12-04 18:45 GMT

73 பாசன ஏரிகள்

பெரம்பலூர் மாவட்டம் அதிக அளவு மானாவாரி நிலங்களைக் கொண்டுள்ள பகுதியாகும். மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டம், வேளாண்மை, குடிநீர், கால்நடைகள் உள்ளிட்ட பல்லுயிர்களின் நீராதாரமாக நீர்நிலைகள் விளங்கி வருகிறது. முக்கிய நீராதாரங்களாக மருதையாறு, சின்னாறு, கல்லாறு, கோனேரி ஆறு, வெள்ளாறு, ஆனைவாரி ஓடை உள்ளிட்ட ஆறுகள் மற்றும் எண்ணற்ற ஓடைகள், சிற்றோடைகள் விளங்கி வருகிறது. பெரம்பலூர் மாவட்ட பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் கொட்டரை, குரும்பாபாளையம், ஆதனூர் ஆகிய கிராம பகுதியில் கட்டப்பட்டு வரும் மருதையாறு நீர்த்தேக்கம், விசுவக்குடி அணை, சின்னாறு நீர்த்தேக்கம் உள்ளிட்டவைகளோடு 73 பாசன ஏரிகளும் உள்ளன.

இதில் குன்னம் தாலுக்காவில் 17 ஏரிகள் உள்ளன.. இந்த ஏரிகளில் எழுமூர் ஏரி பெரிய ஏரியாகும். எழுமூர் ஏரி அமைக்க கடந்த 1964-ம் ஆண்டு திட்டமிடப்பட்டு ரூ.17 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் 1966-ம் ஆண்டு ஏரிக்கான நிலம் அளக்கப்பட்டு கையகப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 1969-ம் ஆண்டு ஏரியை உருவாக்குவதற்கான பணி தொடங்கப்பட்டது. 1971-ம் ஆண்டு பணிகள் முடிவுற்று 4 வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. இந்த ஏரி சுமார் 750 ஏக்கருக்கு மேல் பரந்து விரிந்துள்ளது.

கரையோரம் சாலை

இந்த ஏரிக்கு சித்தளி, எழுமூர், பீல்வாடி, பேரளி, கவுள்பாளையம், கீழப்புலியூர், அருமடல் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து வாய்க்கால்கள், ஓடைகள் வழியாக தண்ணீர் வருகிறது. இந்த ஏரியின் மூலம் எழுமூர், கீழப்புலியூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 800 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் இந்த ஏரியின் மூலம் அருகாமையில் உள்ள கிணறுகளும் நீரோட்டம் பெறுகிறது. இந்த ஏரியில் தற்போது மொத்தம் 5 மதகுகள் உள்ளன.

இவைகளில் சில மதகுகளைச்சுற்றி முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. மதகுகள் வழியாக விவசாய நிலங்களுக்கு கொண்டு சேர்க்கும் பாசன வாய்க்கால்களில் சம்பு உள்ளிட்ட புற்கள் வளர்ந்து உள்ளதால் தண்ணீரானது கடைசி வரை செல்வதில் சிரமம் உள்ளது.

மேலும் பாசன வாய்க்கால்களில் உள்ள சம்பு, புற்களால் கரையில் நடந்து செல்லவும் சிரமமாக உள்ளது. அதை விவசாயிகளே முடிந்த வரை சுத்தம் செய்து வருகின்றனர். ஏரியின் இருபுற கரைகளிலும் ஆங்காங்கே சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளதால் விவசாயிகள் ஏறி இறங்கவும், வயல்களுக்குச் செல்லவும் மிகவும் சிரமமாக உள்ளது. ஏரியை தூர் வாரி பாசன வாய்க்கால்களில் உள்ள தடைகளை அகற்றியும், கரைகளை சீரமைத்தும் விவசாய நிலங்களுக்கு இடுபொருட்களை கொண்டு செல்ல கரையோரம் சாலை அமைத்துத் தரவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும்

எழுமூரைச் சேர்ந்த விவசாயி வைத்தீஸ்வரன் கூறுகையில், ஏரியில் இருந்து நீரை பாசனத்திற்காக மதகுகள் வழியே கொண்டு செல்வதில் பாசன வாய்க்கால்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பாசன வாய்க்கால்கள் முறையாக சீரமைக்கப்படாத காரணத்தினால் தண்ணீரானது கடைமடை விவசாயிகளின் வயல்களுக்குச் செல்வது சிரமமாக உள்ளது.

குறிப்பாக பெரிய மதகு எனும் மணப்போக்கியில் புற்கள் நிறைந்து உள்ளதால் தண்ணீர் தேங்கியே நிற்கிறது. அதிக மழை பெய்தால் வயலில் இருந்து வெளியேறும் நீரும் இந்த வாய்க்கால்கள் வழியே தான் வெளியேற வேண்டும். ஆனால் முறையாக வாய்க்கால்கள் சீரமைக்கப்படாமல் உள்ளதால் தண்ணீர் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. சமீபத்தில் ஏரியின் 2-வது மதகில் இருந்து நீரைக் கொண்டு செல்லும் வாய்க்காலின் இடையில் உடைப்பு ஏற்பட்டு நீரானது வீணாகிச் சென்றது. வாய்க்காலின் உடைப்பு சரி செய்யும் பணியை அரசு செய்யாத காரணத்தினால் விவசாயிகள் சிலர் இணைந்து அந்த உடைப்பையும், வாய்க்காலையும் தங்கள் சொந்த செலவில் பொக்லைன் எந்திரத்தை கொண்டு சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து உரிய முயற்சிகளை மேற்கொண்டு மணப்போக்கி உள்ளிட்ட அனைத்து பாசன வாய்க்கால்களையும் சீரமைத்தால் விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக அமையும் என்றார்.

ஏரியின் கரைகளை...

எழுமூரைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ் கூறுகையில், எழுமூர் ஏரியின் கரையானது சுமார் ஒன்றரை கிலோ மீட்டருக்கும் மேல் நீளமாக உள்ளது. இந்த கரை வழியாகத்தான் வயல்களுக்குச் செல்ல கீழே இறங்கி ஏற வேண்டும். கரையின் பகுதிகளில் ஆங்காங்கே சீமைக்கருவேல மரங்கள், உன்னிச்செடிகள் உள்ளிட்டவை சூழந்து உள்ளது. இதனால் வயலில் ஏறி இறங்க மிகவும் சிரமமாக உள்ளது. கரைகளில் இருந்து இறங்கும் படிக்கட்டுகளையும் புதுப்பிக்க வேண்டும். கரைகளில் உள்ள முட்செடிகளை அகற்றாவிட்டால் வருங்காலங்களில் ஏறி இறங்க மிகுந்த சிரமமாக இருப்பதோடு வண்டிகளில் செல்லவும் கடினமாக இருக்கும். எனவே கரையை விரைந்து சீரமைத்து உதவ வேண்டும். ஏரி கரையின் கீழ்பகுதியில் பாதை அமைத்துத் தர வேண்டும் என்றார்.

பல முறை மனு

எழுமூர் பகுதியை சேர்ந்த விவசாயி நடராஜன் கூறுகையில், எழுமூர் ஏரி கரைகளில் இருந்து பாசன நிலங்களுக்குச் இடுபொருட்கள் மற்றும் விளைபொருட்களை கொண்டு செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. அதே போல் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை வயல்களுக்கு கொண்டு செல்லவும், உரம் எடுத்துச் செல்லவும் போதிய பாதை வசதியில்லை. ஆகையினால் ஏரிக்கரையின் கீழ் பகுதியில் வயல்களின் ஓரமாக பாதை அமைத்துக் கொடுத்தால் வாகனங்கள் சென்று வரவும் விவசாயி சென்று வரவும் ஏதுவாக அமையும். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பல ஆண்டுகளாக பல முறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கைகளோ, உரிய பதிலோ இல்லை. எனவே விரைந்து பாதை அமைத்துத் தர வேண்டும்.

ஆழப்படுத்த வேண்டும்

விவசாயி மணிவேல் கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஏரி நீரைப் பயன்படுத்தி 3 போகம் பயிரிட்டோம். ஆனால் தற்போது ஏரி போதிய ஆழம் இல்லாத காரணத்தினாலும், பாசன வாய்க்கால்கள் சீரமைக்கப்படாத காரணத்தினாலும் ஒரு போகம் மட்டுமே பயிரிட முடிகிறது. அதனால் வரும் கோடையில் நீர் வற்றினால் ஏரியை முறையாக அரசு ஆழப்படுத்த வேண்டும். மதகுப் பகுதியிலும், ஏரியை ஆழப்படுத்தி அனைத்து மதகிலும் சீராக தண்ணீரை கொண்டு சேர்க்க உதவ வேண்டும்.

மேலும் மதகுகளை சரியான காலங்களில் பராமரிக்க வேண்டும். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஏரி தொடர்பான தகவல் பலகையும் அமைக்க வேண்டும். மேலும் நெல் பயிருக்கான இடுபொருட்கள், செலவினங்கள் அதிகமாகி விட்டது. ஆனால் நெல்லுக்கான விலை போதுமானதாக இல்லை. எனவே நெல்லுக்கு உரிய விலை கிடைக்க அரசு முயற்சிக்க வேண்டும். கோடை காலத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில், எழுமூர் பெரிய ஏரியை தூர்வார வேண்டும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்