பண்ணையாளர்கள் 30 பைசாவுக்கு மேல் குறைத்து கொடுக்க வேண்டாம்
முட்டை விலை உயர வாய்ப்பு: பண்ணையாளர்கள் 30 பைசாவுக்கு மேல் குறைத்து கொடுக்க வேண்டாம் என தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தகவல் தெரிவித்து உள்ளனர்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல துணை தலைவர் சிங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மண்டலத்தில் கடந்த 15 நாட்களாக 'மைனஸ்' நிலையாக இருப்பதற்கு பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகளின் ஒத்துழைப்பே காரணம். இதை போலவே வரும் காலங்களிலும் நிலையான மைனஸ் விலை அல்லது அறிவிக்கப்படும் முட்டை விற்பனை விலை தொடர பண்ணையாளர்களும், வியாபாரிகளும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மற்ற மண்டலங்களின் சந்தை நிலவரத்தை அனுசரித்து நாமக்கல்லிலும், வருகிற நாட்களில் முட்டை விலை ஏறும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. எனவே முட்டை விலை ஏறும் வாய்ப்பு உள்ளதால் பண்ணையாளர்கள் 30 பைசா மைனசுக்கு மேல் கொடுக்க வேண்டாம்.
தற்போது ஒரு சில இடங்களில் 35 முதல் 40 காசுகள் வரை குறைத்து கேட்பதாக தகவல்கள் வருகின்றன. மற்ற மண்டலங்களின் சந்தை நிலவரம் தெரியாமல் சில வியாபாரிகள் பண்ணையாளர்களுக்கு நெருக்கடிகள் கொடுப்பதாக அறிகிறோம். அவ்வாறு யாராவது அதிக மைனஸ் கேட்டால் அந்தந்த வட்டார குழு தலைவரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கவும்.
சில வியாபாரிகள் பண்ணையாளர்களிடம் அதிக மைனஸிற்கு முட்டைகளை கேட்பதை முற்றிலுமாக கட்டுப்படுத்தும் விதமாக மீண்டும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகளோடு இணைந்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம், தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளனம் உள்ளிட்டவை இணைந்து முட்டை எடுத்து செல்லும் வியாபாரிகளின் வண்டிகளை ஆய்வு செய்ய உள்ளார்கள்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.