பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலகுறிச்சியை சேர்ந்தவர் ஜெகநாதன்(வயது 45). அரசு பஸ் டிரைவர். இவர், ரமணமுதலிபுதூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி அரசு பஸ்சை ஓட்டி சென்றார். அப்போது கோட்டூர் பேரூராட்சி அலுவலகம் அருகே வந்த போது வாலிபர் ஒருவர் மொபட்டில் நின்று கொண்டிருந்தார். இதையடுத்து ஜெகநாதன் அவரை சாலையோரமாக நிற்குமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த வாலிபர் கீழே கிடந்த கல்லை எடுத்து பஸ்சின் மீது வீசினார். இதில் பஸ்சின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கல் வீசியது கோட்டூரை சேர்ந்த பஞ்சலிங்கம் (38) என்பது தெரியவந்தது. இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பஞ்சலிங்கத்தை கைது செய்தனர்.