நகரங்களை போன்று கிராமப்புறங்களிலும் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்
நகரங்களை போன்று கிராமப்புறங்களிலும் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று முன்னாள் மாணவர்கள் சங்க விழாவில் சவுமியா அன்புமணி பேசினார்.
சென்னை,
சென்னை பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர்கள் சங்கம் புத்துயிர் பெற்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சங்கத்தின் தொடக்கவிழா பல்கலைக்கழக நூற்றாண்டு கட்டிட வளாக அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ்.கவுரி தலைமை தாங்கினார். பதிவாளர் எஸ்.ஏழுமலை, முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் என்.மதிவாணன், 'டீன்' எஸ்.தேன்மொழி, இணைச் செயலாளர் எஸ்.ஆம்ஸ்ட்ராங்க் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பல்கலைக்கழகத்தில் படித்த முன்னாள் மாணவர்களான சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி டி.மதிவாணன், பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி, தொழில் அதிபர் முருகவேல் ஜானகிராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
கடமை, பொறுப்பு
விழாவில் சவுமியா அன்புமணி பேசுகையில், 'சென்னை பல்கலைக்கழகம் போன்று பல்வேறு கல்வி நிறுவனங்கள் சென்னையில் இருக்கின்றன. இங்கு பள்ளிகள், ஆஸ்பத்திரிகள், நல்ல போக்குவரத்து, பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்பட பல்வேறு வசதிகள் இருப்பதை பெருஞ்செல்வமாக கருதுகிறோம். ஆனால் கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கு இதுபோன்ற வசதிகள் இன்னும் கிடைக்கவில்லை. அவர்களுக்கு இந்த வசதிகளை கொண்டு சேர்ப்பதுதான் நம்முடைய கடமை, பொறுப்பாக இருக்கவேண்டும். நகரங்களை போன்று கிராமப்புறங்களிலும் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்' என்றார்.
துணைவேந்தர் பாராட்டு
சவுமியா அன்புமணி, சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 1990-1992-ம் ஆண்டுகளில் சமூகவியல் துறையில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர். அவர் தனது கணவரான பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணியுடன் இணைந்து இந்த துறையின் மேம்பாட்டுக்கு ஏற்கனவே ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளார். இதற்காக அவரை துணைவேந்தர் கவுரி பாராட்டினார்.
விழாவில் சென்னை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்க இலச்சினையுடன் சிறப்பு தபால்தலை வெளியிடப்பட்டது.