பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரிக்கனவு நிகழ்ச்சியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
கல்லூரிக்கனவு நிகழ்ச்சி
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியின் தொடக்க விழாவுக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கி பேசினார். மேயர் தினேஷ்குமார், தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் நான் முதல்வன் என்ற வழிகாட்டி புத்தகத்தை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-
மேல்நிலைப்பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் தங்களின் எதிர்கால கனவை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றி பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தேர்வு செய்வது, மேற்படிப்பை முடித்த உடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போன்ற விவரங்கள், புகழ்பெற்ற வல்லுனர்கள் மற்றும் கல்வியாளர்களை கொண்டு வழிகாட்டுதல் இந்த நிகழ்ச்சி மூலம் வழங்கப்படுகிறது.
படிப்பே குறிக்கோள்
தற்போதைய நிலையில் படித்து முடித்த அனைவருக்கும் அரசு வேலைவாய்ப்பு என்பது சாத்தியமில்லாதது. மக்கள் தொகையின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்ட பணியிடங்களில் தான் அரசு பணியாளர்களை நியமிக்க முடியும். இதனால் படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் வகையில் தனியார்துறை நிறுவனங்கள் மூலமாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. மாணவ-மாணவிகள் படிப்பை குறிக்கோளாக கொண்டால் எதிர்காலத்தில் சிறந்த பாதை அமையும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இதைத்தொடர்ந்து கல்வியாளர்கள், வல்லுனர்கள் மாணவ-மாணவிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கி பேசினார்கள். மாலை வரை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர்ச்செல்வி, மாவட்ட கல்வி அதிகாரி கணேசன், மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன், கோவிந்தராஜ், கோவிந்தசாமி, கவுன்சிலர்கள் திவாகரன், பத்மாவதி, தி.மு.க. தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராஜன், ஆர்பிட்ரேஷன் கவுன்சில் தலைவர் கருணாநிதி, நிர்வாகி திலகராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.