பள்ளிகளை பார்வையிடுதல் குறித்து கல்வித்துறை அலுவலர்களுக்கு பயிற்சி
பள்ளிகளை பார்வையிடுதல் குறித்து கல்வித்துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பெரம்பலூரில், மாவட்ட பள்ளி கல்வித்துறை அலுவலர்களுக்கு செல்போன் செயலி மூலம் பள்ளிகளை பார்வையிடுதல் சார்ந்த ஒரு நாள் பயிற்சி நடந்தது. பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தொடங்கி வைத்து, செல்போன் செயலி பயன்பாடு குறித்து கல்வித்துறை அலுவலர்களிடையே பேசினார். மாவட்ட கல்வி அலுவலர்கள் அண்ணாதுரை, ஜெகநாதன், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் முதல்வர் மயில்வாகணன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் சுரேஷ், முத்துக்குமார், உதவி திட்ட அலுவலர்கள் ஜெய்சங்கர், ரமேஷ் ஆகியோர் செல்போன் செயலி பயன்பாடு குறித்து விளக்கம் அளித்தனர். பயிற்சியில் பள்ளியில் ஆசிரியர்கள் கற்பித்தல் முறை, கற்பித்தல் துணை கருவிகள் பயன்படுத்துதல், மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளை திருத்தம் செய்தல், மாணவர்களின் கற்றல் விளைவுகள், வாசித்தல் திறன் உள்ளிட்ட செயல்பாடுகளை பள்ளியில் உற்று நோக்கல் செய்து, செல்போன் செயலியில் பதிவிடுதல் சார்ந்து தெளிவாக விளக்கப்பட்டது. பயிற்சியின் கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆனந்த், ரமேஷ் மற்றும் வட்டார கல்வி அலுவலர் சின்னசாமி செயல்பட்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்தனர். இந்த பயிற்சி அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அளிக்கப்பட்டது.