படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க முன்வர வேண்டும் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பேச்சு
படித்த இளைஞர்கள் வேலை தேடுவதை தவிர்த்து தொழில் தொடங்க முன்வர வேண்டும் என்று வடலூரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
வடலூர்
புத்தாக்க பயிற்சி
வேளாண்மை துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான புத்தாக்கப் பயிற்சி மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்கள் குறித்த மண்டல அளவிலான விழிப்புணர்வு கூட்டம் வடலூரில் நடைபெற்றது. இதற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், வேல்முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசு முதன்மை செயலாளர் மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை முனைவர் நடராஜன் ஆகியோர் வேளாண்மை துறை சார்ந்த அரசு திட்டங்கள் குறித்த திட்ட விளக்க உரையை எடுத்துரைத்தனர்.
நலத்திட்ட உதவிகள்
பின்னர் முந்திரி உணவு பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டி விற்பனை செய்வதற்காக நடுவீரப்பட்டு மற்றும் பண்ருட்டியை சேர்ந்த 2 பயனாளிகளுக்கு ரூ.52 லட்சம் மதிப்பிலும், 8 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூ.27 லட்சம் மதிப்பிலும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து அவர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உரிய ஆலோசனைகளை பெற்றிட 7200818155 என்ற தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தி வைத்து பேசும்போது, படித்த இளைஞர்கள் வேலை தேடுவதை தவிர்த்து தொழில் தொடங்க முன்வர வேண்டும். இதன் மூலம் தொழில் முனைவோர்களாக மாறி நீங்கள் மற்றவர்களுக்கு வேலை தரும் முதலாளி என்ற நிலைக்கு உயர வேண்டும். கடலூர் மாவட்டத்தில் ஒரு நாள் வீசிய சூறைக்காற்றினால் 700 ஏக்கர் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு மாத காலத்துக்குள் நிவாரணம் வழங்கப்பட உள்ளது என்றார்.
சந்தை வாய்ப்புகள்
பின்னர் உணவு பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் பயிற்சி, வேளாண் உணவுப்பொருட்கள் ஏற்றுமதி, சந்தை வாய்ப்புகள் விவரம், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான பல்வேறு நிதிஉதவி வாய்ப்புகள், வேளாண் தொழில் முனைவோருக்கான நிதிஉதவி வட்டி மானியம் மற்றும் முந்திரி ஏற்றுமதி குறித்த விவரங்கள் துறை வல்லுனர்களால் விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி, வேளாண் துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) பூங்கோதை, குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் சிவக்குமார், வடலூர் நகரமன்ற தலைவர் சிவக்குமார், நகர செயலாளர் தமிழ்செல்வன், நகரமன்ற துணை தலைவர் சுப்புராயலு மற்றும் அரசு அதிகாரிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.