அதிமுகவை சீண்டி பார்ப்பவர்கள் அழிந்து போவார்கள் விழுப்புரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
அதிமுகவை சீண்டி பார்ப்பவர்கள் அழிந்து போவார்கள் என்று விழுப்புரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து கார் மூலம் சேலத்துக்கு சென்றார். அப்போது விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு சிக்னல் அருகில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் எம்.பி. தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்றனர்.
தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
சூழ்ச்சியாளர்களுடன் கைகோர்த்து...
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என இருபெரும் தலைவர்கள் வகித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி, உங்கள் மூலமாக எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த இயக்கத்தை அழிக்க வேண்டும், ஒடுக்க வேண்டும் என்று நமது எதிரியாக இருக்கின்ற தி.மு.க. எத்தனையோ சூழ்ச்சிகளை செய்தது. அத்தனை சூழ்ச்சிகளையும் முறியடிக்கவும், தி.மு.க.வை வீழ்த்தவும் மகத்தான பணியை நீங்கள் எனக்கு வழங்கி இருக்கிறீர்கள். உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக நான் செயல்படுவேன்.
அ.தி.மு.க.வை எப்படியாவது முடக்க வேண்டும் என்பதற்காக சில சூழ்ச்சியாளர்கள் நம்முடன் இருந்து இன்று பிரிந்து தி.மு.க.வுடன் கைகோர்த்துக்கொண்டு நமக்கு எதிராக செயல்பட்டார்கள். அவர்களை நீதிமன்றத்தின் மூலமாகவும், சட்டத்தின் மூலமாகவும் வென்று எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து நிறைவேற்றுவோம்.
பொய் வழக்குகளை தகர்த்து எறிவோம்
இன்றைக்கு வேண்டுமென்றே திட்டமிட்டு அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மீது பொய் வழக்கு போட்டு வருகிறார்கள். எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் அனைத்து பொய் வழக்குகளையும் சட்டரீதியாக சந்தித்து தகர்த்து எறிவோம். அ.தி.மு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர். நமக்கு ஆக்கமும், ஊக்கமும் தந்திருக்கிறார். அவர் உருவாக்கிய இயக்கத்தை ஜெயலலிதா, பல்வேறு சோதனையான காலக்கட்டத்திலும் வென்றெடுத்து எம்.ஜி.ஆர். கண்ட கனவை தனது இறுதி மூச்சு உள்ளவரை நிறைவேற்றி இருக்கிறார். ஜெயலலிதா, இந்த இயக்கத்தை கட்டிக்காத்தபோது பல சோதனைகள் வந்தது. அந்த சோதனைகளை எல்லாம் சந்தித்துதான் வெற்றி என்ற செய்தியை கொடுத்துக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்து இன்றுவரை நாம் சோதனைகளை சந்தித்துதான் வருகிறோம். எத்தனை சோதனைகள் வந்தாலும் இங்கு குழுமியிருக்கிற தொண்டர்கள், நிர்வாகிகள் மூலம் படிக்கட்டுகளாக மாற்றி வெற்றிகொடி நாட்டுவோம்.
சீண்டி பார்க்க முடியாது
அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொடர்ந்து மக்கள் பணியை செய்வோம். அ.தி.மு.க. தொண்டர்கள் உழைப்பால் உயர்ந்தவர்கள். மக்களுக்கு சேவை செய்வதற்காகவே ஆண்டவனால் படைக்கப்பட்டவர்கள்.
இந்த இயக்கத்தை எவனாலும் சீண்டி பார்க்கவும் முடியாது, தொட்டுப்பார்க்கவும் முடியாது. அ.தி.மு.க.வை யார் சீண்டினாலும், அழிக்கப்பார்த்தாலும் அவர்கள்தான் அழிந்துபோவார்கள். அ.தி.மு.க.வின் ஆலமரமாக இருக்கும் தொண்டர்களால் இந்த இயக்கம் மீண்டும் ஆட்சி அரியணையில் அமரும். அந்த காலம் வெகு தொலைவில் இல்லை.
மீண்டும் ஆட்சி மலர சபதம்
வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரலாம். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று மத்திய அரசு சொல்கிறது. அவர்கள் சொல்வதைப்போல் 2024-ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரும். நமக்கு விடிவுகாலம் பிறக்கும். ஒளிமயமான எதிர்காலம் நம் கண்முன் தெரிகிறது.
ஆகவே இங்கு வந்துள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் இரவு பகல் பாராமல் தேனீக்கள் போல, எறும்புகள் போல சுறுசுறுப்பாக செயல்பட்டு மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி மலர அனைவரும் பாடுபடுவோம், வெற்றி பெறுவோம். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலர இந்த நேரத்தில் நாம் அனைவரும் சபதம் ஏற்போம். இவ்வாறு அவர் பேசினார்.