திமுக ஆட்சியில் ஒரு துறையில் கூட முதன்மை நிலை இல்லை எடப்பாடி பழனிசாமி பேச்சு

திமுக ஆட்சியில் ஒரு துறையில் கூட முதன்மை நிலை இல்லை என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Update: 2023-04-02 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர், 

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில் கொடியேற்று விழா திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சித்தானங்கூர் கிராமத்தில் காந்தலவாடி செல்லும் சாலையில் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இரா.குமரகுரு தலைமை தாங்கினார்.

விழுப்புரம் மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி., முன்னாள் அமைச்சர் ப.மோகன், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் திருவெண்ணெய்நல்லூர் வடக்கு இரா.ஏகாம்பரம், திருவெண்ணெய்நல்லூர் தெற்கு ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் காந்தலவாடி ஜெ. பாக்யராஜ் வரவேற்றார். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு 100 அடி உயர கொடி கம்பத்தில் அ.தி.மு.க. கொடி ஏற்றினார்.

தொடர்ந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:-

மிகப்பெரிய துரோகம்

இன்றைய ஆட்சியாளர்கள் தானும் தனது குடும்பமும் செழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வாக்களித்த மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வந்துவிட்டு மக்களை மறந்தவர் இன்றைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று நாடு அறியும்.

பொம்மை முதல்-அமைச்சர்

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம், புதிய மருத்துவக்கல்லூரி அமைந்ததற்கு அ.தி.மு.க. ஆட்சி தான் காரணம். ஆனால் இன்றைக்கு தி.மு.க. ஆட்சியில் ஒரு துறையில் கூட முதன்மை நிலை இல்லை. இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் என்ற பெயர் பெற்ற தமிழ்நாடு இன்று தலை குனிந்து நிற்கின்ற நிலை இருக்கிறது. ஆளுகின்ற முதல்-அமைச்சர் ஒரு பொம்மை முதல்-அமைச்சர். நாட்டில் என்ன நடக்கிறது என்று அவருக்கு தெரியவில்லை. வருகிற 2024-ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்