'தொழிலாளர்களுக்காக என்றைக்கும் உழைக்கும் கட்சி அ.தி.மு.க.' எடப்பாடி பழனிசாமி பேச்சு

தொழிலாளர்களுக்காக என்றைக்கும் உழைக்கும் கட்சி அ.தி.மு.க. என்று சேலத்தில் நடந்த மே தின பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Update: 2023-05-01 23:29 GMT

சேலம்,

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. கொண்டலாம்பட்டி பகுதி மற்றும் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் நேற்று இரவு தாதகாப்பட்டி கேட் அருகில் நடந்தது.

கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

கோடிக்கணக்கான உழைப்பாளர்களால் இந்த உலகம் இயங்கி கொண்டிருக்கிறது. ஏனென்றால் உழைக்கிற வர்க்கத்துக்கு துணை நிற்கிற கட்சி அ.தி.மு.க.

நிறுத்திவிட்டார்

இன்றைய தினம் தி.மு.க. அரசு சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒரு சட்டத்தை கொண்டு வந்தது. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்டு கட்சி எதிர்க்கவில்லை. ஆனால் நான் ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டேன். தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த தொழிலாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிபணிந்து அவர் கொண்டு வந்த சட்டத்தை அவரே நிறுத்திவிட்டார்.

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் சேலம் மாவட்டத்துக்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. அதனால்தான் தி.மு.க. ஆட்சி எப்போது போகும் என்று தமிழகத்தின் ஒட்டுமொத்த குரலாக உள்ளது. தி.மு.க. பொறுப்பேற்று 2 ஆண்டு காலத்தில் ரூ.30 ஆயிரம் கோடியை உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் என்ன பண்றது என்று தெரியாமல் தடுமாறி கொண்டிருப்பதாக நிதி அமைச்சர்தான் கூறி அம்பலப்படுத்துகிறார். இதை நாங்கள் கூறவில்லை. இன்னும் பல கேசட்டுகள் வர உள்ளன. இது குறித்து மு.க.ஸ்டாலின் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. அப்படி என்றால் இது உண்மையான தகவல் தானே.

மக்கள் கேட்பார்கள்

இதுகுறித்து தி.மு.க.வில் அங்கம் வகிக்கிற எந்த கட்சியும் கேட்காது. அடுத்த தேர்தல் வரும் போது மக்கள் கேட்பார்கள். அந்த கூட்டணி கட்சிகள் அனைத்தும் காணாமல் போய் விடும். அ.தி.மு. க.வினர் சுட்டிக்காட்டினால் உடனடியாக வழக்கு போடுவார்கள்.

ஆட்சி மாறினால் காட்சி மாறும். இதற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். தி.மு.க. பொறுப்பேற்றதில் இருந்து கமிஷன், கலெக்சன், கரப்சன் ஆகியவற்றை சரியாக செய்கிறது. எல்லா துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

சீரழிந்துவிட்டது

எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்கிறது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துவிட்டது. சட்டமன்றத்தில் போலீஸ் மானிய கோரிக்கையில் 2 மணி நேரம் புள்ளி விவரத்துடன் எடுத்துரைத்தேன். அதை மட்டும் ஒளிபரப்பு செய்திருந்தால் மக்கள் மு.க.ஸ்டாலினை பார்த்து எள்ளி நகையாடி இருப்பார்கள்.

மக்களின் வரி பணத்தில் ரூ.88 கோடியில் மெரினா கடலில் கருணாநிதிக்கு பேனா சிலை எதற்கு?. அறிவாலயத்தில் வைத்துகொள்ள வேண்டியது தானே?. நாட்டு மக்களை பற்றி சிந்திக்காமல் வீட்டை பற்றி சிந்திக்கிற கட்சி தி.மு.க. ஆனால் என்றைக்கும் மக்களுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும் பாடுபடுகிற கட்சி அ.தி.மு.க. தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்