அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நல்ல திட்டங்களுக்கு தி.மு.க. அரசு மூடுவிழா நடத்துகிறது-எடப்பாடி பழனிசாமி பேச்சு

அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நல்ல திட்டங்களுக்கு தி.மு.க. அரசு மூடுவிழா நடத்துகிறது என்று அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2022-08-09 22:54 GMT

ஓமலூர்:

எடப்பாடி பழனிசாமி

சென்னை செல்லும் வழியில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு நேற்று அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்றார். அப்போது சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டியில் அவருக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக அவர் ஓமலூர் தொகுதிக்கு வந்தார்.

தீவட்டிப்பட்டியில் சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் மணி எம்.எல்.ஏ. தலைமையில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர் செம்மலை, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பல்பாக்கி கிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய தாலுகா

சேலம் மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபித்து இருக்கிறோம். மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 10 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி அ.தி.மு.க. தான்.

ஓமலூர் தொகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது, கூட்டு குடிநீர் திட்ட மூலம் குடிநீர் வழங்குதல் என மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுத்து நற்பெயரை பெற்றுள்ளது. அதோடு இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று காடையாம்பட்டி தாலுகா புதியதாக உருவாக்கி உள்ளோம். ஓமலூரில் புதிதாக தாலுகா அலுவலகம் கட்டப்பட்டது.

மூடுவிழா நடத்துகிறது

அதிகமாக ஏழைகள் வசிக்கும் பகுதியில் அம்மா மினி கிளினிக் ஏற்படுத்தி அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சிகிச்சை ஏற்பாடு செய்த அரசு அ.தி.மு.க. இதை பொறுத்துக் கொள்ள முடியாத மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டம் என்பதாலும், மக்களிடம் அதிக அளவில் வரவேற்பு இருப்பது என்று எண்ணியும் அதை மூடி உள்ளனர். அ.தி.மு.க. கொண்டு வந்த நல்ல, நல்ல திட்டங்களை மூடு விழா நடத்துவதற்கு தான் இந்த அரசாங்கம் வந்ததே, தவிர மக்களுக்கு நன்மை செய்ய வரவில்லை.

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் என அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களையும் நிறுத்திவிட்டனர். இந்த ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் கட்சி. இந்த மக்கள் விரோத ஆட்சி விரைவில் வீட்டுக்கு போவது உறுதி. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. அனைத்து துறைகளிலும் ஊழல். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 14 மாத காலங்களில் ரூ.20 ஆயிரம் கோடி ஊழல் நடந்தது. எனவே மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி மலர அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொண்டர்கள்

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியம், சேரன் செங்குட்டுவன், ராஜேந்திரன், அசோகன் கோவிந்தராஜ், மாவட்ட இணைச்செயலாளர் ஈஸ்வரி பாண்டுரங்கன், காடையாம்பட்டி ஒன்றிய குழுத்தலைவர் மாரியம்மாள் ரவி, துணைத்தலைவர் மகேஸ்வரி வெங்கடேசன், நகர செயலாளர்கள் சரவணன், கோவிந்தசாமி, கணேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் ரமேஷ், சத்தியவாணி சந்தானம், மணி, வரதராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கராஜ், குப்புசாமி உள்பட தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்