எட்டப்பர் வேலை செய்பவர்களுக்கு இடைத்தேர்தல் பாடமாக அமையும் -எடப்பாடி பழனிசாமி

எதிரிகளுடன் கைகோர்த்து எட்டப்பர் வேலை செய்பவர்களுக்கு இடைத்தேர்தல் பாடமாக அமையும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2023-01-27 20:43 GMT

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தலைமையில் 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பணிக்குழு நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் ஈரோடு செங்கோடம்பள்ளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நமக்கு தேர்தல் என்பது புதியது அல்ல. பல சோதனைகளை வென்று வெற்றி பெற்று இருக்கிறோம்.

பாடமாக அமையும்

எதிரிகளோடு கைகோர்த்து எட்டப்பர் வேலை செய்பவர்கள் இந்த இயக்கத்தை முடக்கவும், அழிக்கவும் நினைக்கிறார்கள். எனவே அவர்களுக்கு இந்த இடைத்தேர்தல் பாடமாக அமைய வேண்டும்.

இந்தியாவே இந்த இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்? என்று தமிழகத்தை நோக்கி எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. எனவே எறும்பு, தேனீயை போல் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும். சிந்தாமல், சிதறாமல் வாக்குகளை நமது வேட்பாளருக்கு பதிவு செய்யும் வகையில் உழைக்க வேண்டும். கண்ணுக்கு எட்டும் தூரம் வரை ஆட்களே தெரியவில்லை என்று பலர் பேசுகிறார்கள். 4, 5 நாட்கள் காத்திருந்து பாருங்கள். கண்ணுக்கு எட்டும் தூரம் வரை அ.தி.மு.க. கரை வேட்டி கொண்டவர்களை பார்க்க முடியும். அதேபோல் நமது வீராங்கனைகள் ஆங்காங்கே மக்களை சந்தித்து வெற்றிக்கு உழைப்பார்கள். அதை எதிரிகள் புரிந்து கொள்வார்கள்.

நெஞ்சை நிமிர்த்தி...

அ.தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்று பலர் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். அ.தி.மு.க. தோற்ற வரலாறு கிடையாது. நாம் சரியான முறையில் உழைத்தால் நிச்சயம் வெற்றி. நம்மை நாம்தான் தோற்கடிக்க முடியும். வேறு எவராலும் முடியாது. நமக்குள் சிறு, சிறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதையெல்லாம் தூக்கி எறிந்துவிட வேண்டும். எல்லா கட்சியிலும் கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. தி.மு.க. கட்சியில் உச்சக்கட்டமாக இருக்கிறது. நமது தொண்டர்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து உழைத்தால் எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்து இடைத்தேர்தலில் வெற்றி கொடியை நாட்டுவோம். தி.மு.க. ஆட்சி வந்தபிறகு, எப்போது ஆட்சி போகும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதை தி.மு.க. கட்சியினரே கூறுகிறார்கள்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்