கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் - கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் கோரிக்கை

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.

Update: 2023-08-24 08:25 GMT

சென்னை,

கோடநாடு வழக்கு குறித்து ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் தனபால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;-

எனது தம்பி கனகராஜ் கோடநாடு சம்பவத்தில் ஈடுபட்டு திரும்பிய நேரத்தில், பெருந்துறையில் வைத்து சந்தித்தேன். கோடநாடு பங்களாவில் இருந்து, 5 பெரிய பைகளை ஈபிஎஸ் கூறியதன் பெயரில் எடுத்து வந்ததாக கூறினார். அதில் ஏராளமான சொத்து ஆவணங்கள் இருந்தன.

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறிய நிலையில் தான், ஆத்தூரில் விபத்தில் கனகராஜ் உயிரிழந்தார். எனது தம்பி உயிரிழந்தது விபத்து அல்ல; திட்டமிட்ட கொலை. வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும். வழக்கில் எடப்பாடி பழனிசாமியை இதுவரை விசாரிக்காதது ஏன் என தெரியவில்லை. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருக்கிறது.

முதல்-அமைச்சர் மீது நம்பிக்கை இருக்கிறது. எனக்கு உரியப் பாதுகாப்பு முதல்-அமைச்சர் கொடுப்பார் என்று நம்புகிறேன். விரைவில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிக்குத் தண்டனை வாங்கித் தரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு:-

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவத்தை சேலம் ஆத்தூரைச் சேர்ந்த கனகராஜ் தலைமையிலான கும்பல் அரங்கேற்றியது.

இதில் கனகராஜ் சாலை விபத்தில் இறந்து விட்டார். இதையடுத்து போலீசார் இதில் தொடர்புடையதாக சயான், வாளையார் மனோஜ் உள்பட கேரளாவை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர். கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்ட பின், சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, 49 பேர் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகிறது. இவர்கள் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்