ஓ.பன்னீர்செல்வத்துடன் 'இணைந்து பணியாற்ற வாய்ப்பே இல்லை' எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

‘ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பே இல்லை’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

Update: 2022-08-19 00:22 GMT

சென்னை,

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள்.

வழக்கு

அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பொதுக்குழு கூட்டமே செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

இதைத்தொடர்ந்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில்அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மனக்கசப்புகளை தூக்கி எறிந்துவிட்டு...

அ.தி.மு.க.வில் இதற்கு முன்பு சில சில பிரச்சினைகள், கருத்து வேறுபாடுகளால் பிளவுபட்டிருக்கும் நேரத்தில் ஆளுகிற கட்சியாக தி.மு.க. இருந்தது. இன்றைக்கும் அதே சூழல் நிலவியிருக்கிறது. ஆனால் நாங்கள் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா வகுத்த அரசியல் பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம். எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட காரணத்தால், சமீபத்தில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் அ.தி.மு.க.வில் ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த மனக்கசப்புகளை அப்புறப்படுத்திவிட்டு, கட்சி ஒன்றுபட வேண்டும், மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆளும் பொறுப்பை ஏற்க வேண்டும், அதற்கு உறுதுணையாக இருந்து செயல்பட வேண்டும் என்பதே எங்கள் உறுதியான நிலைப்பாடு.

நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்கட்டும். இதற்கு முன்பு ஏற்பட்ட மனக்கசப்புகளை யாரும் மனதில் வைக்காமல் தூக்கி எறிந்துவிட்டு, கட்சி ஒற்றுமையையே பிரதானமாக வைத்து செயல்பட வேண்டும்.

கூட்டு தலைமையில் அ.தி.மு.க.

எம்.ஜி.ஆரை தி.மு.க.வில் இருந்து வெளியேற்றியதால்தான் அ.தி.மு.க. உதயமானது. அதன்பின்னர் தி.மு.க.வா, அ.தி.மு.க.வா? என்ற நிலை வரும்போது, அ.தி.மு.க. தான் தமிழகத்தை ஆளும் உரிமையை மக்களிடம் அதிகமாக பெற்றது. இன்றைக்கு தி.மு.க. ஆளுகிறது. எங்களை பொறுத்தவரை ஜனநாயக ரீதியில் நல்ல எதிர்க்கட்சியாக, ஆளும் அரசின் மக்கள் விரோத போக்கை எதிர்க்கும் முதல் அரசியல் கட்சியாக அ.தி.மு.க. இருக்கும். எனவே எம்.ஜி.ஆரின் பிள்ளைகளாக, ஜெயலலிதாவின் பிள்ளைகளாக இருக்கக்கூடிய நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி 4½ ஆண்டுகாலம் முதல்-அமைச்சராக பணியாற்றியபோது, அவருடன் முழு ஒத்துழைப்பு தந்து நாங்கள் பயணித்திருக்கிறோம். கட்சியின் ஒற்றுமைக்காக பல்வேறு ஜனநாயக கடமைகளை ஆற்றியிருக்கிறேன். அந்த நிலை மீண்டும் வரவேண்டும் என்பதுதான் எங்கள் தலையாய எண்ணம். எங்கள் கொள்கை. ஜெயலலிதா மறைவுக்கு பின்னால் தர்மயுத்தம் தொடங்கப்பட்டு, அதற்கு பின்னால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் எண்ணப்படி கூட்டு தலைமையாக அ.தி.மு.க. செயல்படும் என்பதுதான் எங்கள் கொள்கையாக ஏற்கப்பட்டது.

அதன்படி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக நானும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் சிறப்பாக கட்சியின் சட்ட விதிப்படி எங்கள் பணிகளை நிறைவாக செய்தோம். இதில் எந்த குறைபாடும் இல்லை. எனவே இரட்டை தலைமை என்பதல்ல பிரச்சினை, கூட்டு தலைமையில் தான் அ.தி.மு.க. செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முரண்பாடு ஏன்?

அதனைத்தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:-ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியிடங்கள் பொதுக்குழு உறுப்பினர்களால் தானே தேர்வு செய்யப்பட்டது. ஆனால் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி மட்டும் அப்படி முடியாது என்கிறீர்களே... ஏன் இந்த முரண்பாடு?

பதில்:- கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் கட்சி தொண்டர்களால் வாக்கெடுப்பு நடத்தி தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதே சட்டவிதி. அதை மாற்றவோ, திருத்தவோ கூடாது என்பது தான் அப்போது எங்களுக்கும் வகுக்கப்பட்ட சட்ட விதி. அதன்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. கட்சி விதிப்படி நாங்களும் தொண்டர்களால் வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டோம். அதன்பின்னர் கட்சியின் அமைப்பு ரீதியான தேர்தல்களும் நடந்து முடிந்தது. எனவே கட்சியின் சட்டவிதிப்படி கூட்டுத்தலைமையாக நானும், எடப்பாடி பழனிசாமியும் செயல்படுகிறோம்.

இணைப்பு என்பது தான் எண்ணம்

கேள்வி:- ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்திருக்கிறாரே?

பதில்:- கட்சியை அனைவரும் ஒன்றுசேர்ந்து எடுத்து செல்வதுதான், வருங்காலத்தில் கட்சிக்கு நல்லது. அந்த இலக்கை நோக்கி நாங்கள் பயணிக்கிறோம். எங்களது எண்ணம், செயல் எல்லாமே இணைப்பு... இணைப்பு... இணைப்புதான்.

மேற்கண்டவாறு அவர் பதிலளித்தார்.

எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு

ஆனால் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பை எடப்பாடி பழனிசாமி நிராகரித்தார். அவருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக அவர் தெரிவித்தார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காலாவதியான பதவிகள்

மக்களிடம் செல்வாக்கு பெற்ற அ.தி.மு.க. எனும் மாபெரும் இயக்கத்தை சிலர் தன்வசம் கொண்டுபோக நினைக்கிறார்கள். அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களால்தான் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக நானும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். பொது உறுப்பினர்களால் அல்ல. பின்னர் இந்த பதவியிடங்களை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கு பதிலாக பொது உறுப்பினர்கள் தேர்வு செய்யலாம் என்று செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செயற்குழு நிறைவேற்றிய தீர்மானத்தை பொதுக்குழுவில் வைத்து ஒப்புதல் பெறவேண்டும். ஏனெனில் செயற்குழுவுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அ.தி.மு.க. சட்ட விதிப்படி ஒரு சட்டத்தை இயற்றவோ, ரத்து செய்யவோ, விதிவிலக்கு அளிக்கவோ பொதுக்குழுவுக்கு தான் அதிகாரம் உண்டு. அந்தவகையில் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவில்லை. அதனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியிடங்கள் காலாவதியாகி விட்டன.

ஒற்றை தலைமை விவகாரம்

2 ஆயிரத்து 663 பொதுக்குழு உறுப்பினர்கள் எப்படி ஒற்றை தலைமை கொண்டுவர முடியும்? என்ற கேள்வி எழுகிறது. எங்களோடு பிரிந்து நிற்பவர்கள் கருத்துகளும் அப்படித்தான் இருக்கிறது. கிளை, ஒன்றியம், நகரம், பேரூராட்சி, வட்ட, மாநகராட்சி கடந்து பகுதி, மாவட்டம் என கட்சி பொறுப்புகளில் அங்கம் வகிக்கும் அந்த 2,663 பேரும் கட்சி அமைப்பு ரீதியிலான தேர்தலில் நின்று வெற்றிபெற்றவர்கள். இவர்கள் தனிப்பட்ட முறையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் அல்ல. பொது உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதிநிதிகள்.

வருகிற செப்டம்பர் மாதம் வரை ஓ.பன்னீர்செல்வம்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று இன்னொரு கருத்தையும் கூறிவருகிறார்கள். அது தவறு. கட்சியின் அமைப்பு தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தலிலும் போட்டியிட்டாகிவிட்டது. அதில் இருந்துதான் கணக்கு. அதற்கு முன்பான காலத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது. இந்த தேர்தலில் இது செல்லுமா, செல்லாதா? என்பதே கேள்வி.

இவ்வாறு அவர் கூறினார்.

பதவி மட்டும் வேண்டும்

அதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியிடம், 'உங்களுடன் இணைந்து பணியாற்ற தயார் என ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்திருக்கிறாரே?', என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்து கூறியதாவது:-

ஓ.பன்னீர்செல்வம் அடிக்கடி அழைப்பு விடுப்பார். ஏற்கனவே தர்மயுத்தம் சென்றார். பதவியில்லாமல் அவர் இருக்கமாட்டார். உழைப்பு கிடையாது. ஆனால் பதவி மட்டும் வேண்டும். குடும்பத்தில் உள்ளோருக்கு பதவிகள் வேண்டும். மற்றபடி யாரை பற்றியும் கவலை கிடையாது.

எப்படி ஒத்துப்போக முடியும்?

கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பொதுக்குழு கூட்டத்துக்கு வராமல் ரவுடிகளை அழைத்துக்கொண்டு கட்சி அலுவலகத்துக்கு சென்று கலவரம் நடத்தினார். அலுவலகத்தை சூறையாடி கட்சியின் சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை திருடி சென்றுள்ளார். இவருடன் எப்படி இணைந்து செயல்பட முடியும்? எனக்காகவா கட்சி இருக்கிறது? இல்லை, நான் இல்லை என்றால் வேறு யாராவது ஒருவர் தலைமை பொறுப்புக்கு வருவார்? ஆனால் கட்சியின் உயர் பொறுப்பில் இருப்பவர் இப்படி அநாகரிகமாக நடந்து கொண்டால், எப்படி அவருடன் ஒத்துப்போக முடியும்?

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அனைத்து நிர்வாகிகளும் என்னை முதல்-அமைச்சர் வேட்பாளர் என்றார்கள். ஓ.பன்னீர்செல்வத்தால் இதனை தாங்கிக்கொள்ள முடியவில்லை. 2 வாரங்களால் குழப்பமான சூழல் ஏற்பட்டது. இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டதால், வெறும் 3 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தோம். தேர்தல் தோல்வி இவரால்தான் ஏற்பட்டது. தேர்தல் முடிந்தபிறகு எதிர்க்கட்சி தலைவராக என்னை 63 எம்.எல்.ஏ.க்கள் ஆதரித்தனர். அவரை 3 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் ஆதரித்தனர். இப்படி ஒவ்வொரு முறையும் பிரச்சினை செய்துகொண்டே இருந்தால் மக்கள் எப்படி அ.தி.மு.க.வை ஏற்பார்கள்? எனவே தான் நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பத்தின்பேரில் ஒற்றை தலைமை என்று முடிவு எடுக்கப்பட்டது.

ஒற்றை தலைமை விவகாரம் குறித்து 15 நாட்கள் அவருடன் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர் எதற்கும் ஒத்துவரவில்லை. மக்கள், தொண்டர்களின் எண்ணப்படிதான் கட்சி நடத்தமுடியும். ஆட்சிக்கு வரமுடியும். பெரும்பான்மை தொண்டர்களின் எண்ணத்தைதான் நாங்கள் பிரதிபலிக்கிறோம். ஓ.பன்னீர்செல்வம் தனது கருத்தை பொதுக்குழுவில் சொல்லியிருக்க வேண்டும். தொண்டர்கள் செல்வாக்கு இருந்தால் அங்கே வந்திருக்கலாமே... அதை விடுத்து கட்சி அலுவலகத்தை போய் உடைக்கிறாரே... கட்சி அலுவலகம் எம்.ஜி.ஆர். விட்டு சென்ற சொத்து. அதை நாங்கள் கோவிலாக வழிபடுகிறோம். அந்த கோவிலை உடைத்து சென்றவர்களில் ஒருவர் உயிரிழந்து விட்டார். ஜெயலலிதா அறையை உடைத்தவரின் கால்கள் உடைந்து போயுள்ளது.எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆத்மா தண்டனை கொடுத்திருக்கிறது.

மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்