அதிமுக பொதுச்செயலாளர் ஆன உடன் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட முதல் அதிரடி அறிவிப்பு...!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Update: 2023-03-28 07:11 GMT

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது.

அந்த தீர்ப்பில் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும்" என அறிவித்த ஐகோர்ட்டு பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது. மேலும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கவும் அனுமதி அளித்தது.

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வெளியான உடன் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் வந்த எடப்பாடி பழனிசாமி முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவ சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. அதில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதாக அதிமுக தேர்தல் ஆணையர்கள் அறிவித்தனர். இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக மூத்த நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளார தேர்ந்தெடுக்கப்பட்ட பின் எடப்பாடி பழனிசாமி முதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என்றும் அதற்கான சேர்க்கை படிவங்கள் வரும் 5-ம் தேதி முதல் வங்கப்படும் என்றும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தில் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்