தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலரும் - ஆர்.பி.உதயகுமார் பேட்டி

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலரும் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

Update: 2023-01-17 20:41 GMT


தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலரும் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

முதன்மை மாநிலம்

எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை மேற்கு புறநகர் மாவட்டஅ.தி.மு.க. சார்பாக திருமங்கலம் டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தமிழக சட்டசபை எதிர்கட்சி துணை தலைவரும், மாவட்ட செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கி மாலை அணிவித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியின்போது அனைத்து தரப்பு மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வந்தோம். ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக செயல்பட்டு, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்ந்தது. ஆனால் இன்றைய தி.மு.க. அரசு வெறும் விளம்பர அரசாகதான் இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில்தான் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு முதல்-அமைச்சர் பெயரில் கார் பரிசு திட்டத்தை தொடங்கினோம். ஜல்லிக்கட்டு போட்டி என்பது மைதானத்தில் நடத்துவது அல்ல. ஆனால் தி.மு.க. அரசு ஜல்லிக்கட்டினை தனியாக மைதானம் அமைத்து நடத்த துடிக்கிறது. மைதானம் மூலம் ஜல்லிக்கட்டு நடந்தால் அது நம் பாரம்பரியத்தை அழித்து விடும். ஜல்லிக்கட்டு என்பது வாடிவாசலில் கோவிலில் காளைகளை முதலில் திறந்து விட்டு போட்டியை தொடங்குவது ஆகும். மைதானம் அமைத்தால், எந்த கோவில் வாடிவாசல் அமைப்பார்கள். எந்த கோவிலின் காளையை முதலில் அவிழ்ப்பார்கள். இயற்கையாகவே ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கிற காவல் தெய்வத்தை வணங்கி, அதில் இருந்து காளைகளை அவிழ்த்து விடும் நமது பண்பாடு சிதைந்து போகும்.

வண்டல் மண்

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதானம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கிற இடம், வனப்பகுதியை ஒட்டி இருக்கிற நீர்நிலை இடம். அங்கு கால்நடை பண்ணை அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போர்க்கு, ஊக்கத்தொகையாக மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறினார்கள். இதுவரை வழங்கப்படவில்லை. இந்தியாவில் உள்ள நீர்நிலைகளில் வண்டல் மண் அதிகரிப்பால், 2050-ம் ஆண்டில் நீர் சேமிப்பு திறன் குறைந்து விடும் என்று ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனை உணர்ந்துதான் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்த குடிமராமத்து பணி என்ற பெயரில் நீர்நிலைகளில் உள்ள மணல்களை அப்புறப்படுத்தி அவற்றை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கினார். ஆனால் தி.மு.க. அரசு குடிமராமத்து பணியினை முடக்கி விட்டது.

அ.தி.மு.க.வின் இரு பெரும் தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் கோட்பாடுகளை கடைபிடித்து கட்சியையும், தொண்டர்களையும் எடப்பாடி பழனிசாமி காத்து வருகிறார். அவரது பின்னால் ஒன்றரை கோடி தொண்டர்களும் இருக்கிறார்கள். தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்