தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சர் ஆவது உறுதி: முன்னாள் அமைச்சர் பேச்சு

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சர் ஆவது உறுதி என கரூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Update: 2023-07-20 18:31 GMT

கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்தும், அதனை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும் நேற்று கரூர் வெங்கமேட்டில் கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- விலைவாசி விண்ணை முட்டுகிறது.

தக்காளி, வெங்காயம் விலைவாசி உயர்வுதான் முதலில் தெரிகிறது. ஆனால் காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து விலையும் உயர்ந்து இருக்கிறது. தி.மு.க. அளித்த 505 வாக்குறுதிகளை நம்பி வாக்களித்து விட்டனர். ஆனால் இன்று தி.மு.க. அரசு எப்போது ஆட்சியை விட்டு போகும் என பொதுமக்கள் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் வாக்குறுதியின் போது குடும்ப தலைவி அனைவருக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கூறினார்கள். ஆனால் தற்போது தகுதியானவர்களுக்குதான் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியுள்ள விதிமுறைகளின்படி பார்த்தால் பொதுமக்கள் யாருக்கும் இந்த தொகை கிடைக்காது. தி.மு.க.வினர்களுக்கு மட்டும் தான் உரிமை தொகை கிடைக்கும்.

தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன

தற்போது 2-வது முறையாக மின்சார கட்டணம் உயர்த்தியுள்ளனர். கொங்கு மண்டலம் தொழில் நகரம். இந்த நகரங்களில் மின்சார கட்டணம் உயர்வினால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. டெக்ஸ்டைலில் வேலை இல்லை. இதேநிலை தமிழ்நாட்டில் நீடித்தால் கஞ்சி தொட்டி திறக்கின்ற நிலை வரும். மேலும் வேலையில்லா திண்டாட்டம் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது.

பல அரசியல்வாதிகள் வீடு, தொழிலதிபர்கள் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை செய்துள்ளது. எங்கேயும் பிரச்சினை கிடையாது. அதிகாரிகளை அடித்து, காரை உடைக்கக்கூடிய நிலை கரூரில்தான் நடந்துள்ளது. கரூரில் மட்டும் தனி அரசாங்கம் நடைபெற்று கொண்டிருக்கிறது. கரூரில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்குகூட அனுமதி மறுக்கப்படுகிறது. கோர்ட்டில் மனு அளித்துதான் அனுமதி வாங்க வேண்டியுள்ளது. அ.தி.மு.க.வின் மாநாடு சுவர் விளம்பரங்களை தி.மு.க.வினர் அழிக்கின்றனர்.

முதல்-அமைச்சர் ஆவது உறுதி

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சர் ஆவது உறுதி. விடியா அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். எப்போது தேர்தல் வந்தாலும் ஜெயலலிதாவின் ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் மலரும்,

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, கரூர் சட்டமன்ற தொகுதி பொதுக்குழு உறுப்பினர் சிவசாமி, இணை செயலாளர் மல்லிகா சுப்பராயன், துணை செயலாளர் ஆலம் தங்கராஜ், பொருளாளர் கண்ணதாசன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் தானேஷ் என்கிற முத்துக்குமார், கரூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாலமுருகன், பகுதி செயலாளர் ஆண்டாள் தினேஷ்குமார், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சரவணன், குளித்தலை மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயவிநாயகம் உள்பட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்