'ஓ.பன்னீர்செல்வம் பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை' - எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம் பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை' ஓமலூரில், எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார்.
ஓமலூர்,
ஓ.பன்னீர்செல்வம் பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி ஓமலூரில் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. புறநகர் மாவட்ட அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக மாநில நீர்ப்பாசனதுறை மந்திரி சிவக்குமார், மேகதாதுவில் அணை கட்டுவோம் என்கிறார். அவரது பேச்சு கண்டனத்துக்குரியது. இதில் ஆளும் கட்சியினர் மவுனம் சாதிக்கின்றனர். உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கி உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகம் நடந்து கொள்ள வேண்டும்.
மதுவிலக்கு
எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்களின் பிரச்சினைகளை பற்றித்தான் பேச வேண்டும். எதிர்க்கட்சி என்பது ஆளும் கட்சி செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். அதுதான் எதிர்க்கட்சியின் கடமை. எங்களை பொறுத்தவரை படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். ஒரேடியாக அமல்படுத்த முடியாது.
அப்படி செய்தால் கள்ளச்சாராயம் பெருகிவிடும். மதுவுக்கு எதிராக தீவிர பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும். மது குடிப்பவர்களை மீட்டெடுக்க வேண்டும். படிப்படியாக மதுபான கடைகளை குறைக்க வேண்டும். நாங்கள் இருந்தபோது முதற்கட்டமாக 500 மதுக்கடைகளை மூடினோம்.
செந்தில் பாலாஜி
அ.தி.மு.க. ஆட்சியின் போது தமிழ்நாட்டில் மருத்துவ சேவை சிறப்பாக இருந்தது. இப்போது உள்ள அரசுக்கு மருத்துவ சேவை பற்றி எல்லாம் கவலை இல்லை. அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை. அதனால்தான் சென்னையில் குழந்தை ஒன்று கையை இழந்துள்ளது. அந்த குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ வெளியானது. அதில் கூறிய ரூ.30 ஆயிரம் கோடி குறித்து இதுவரை முதல்-அமைச்சர் எந்த கருத்தும் சொல்லவில்லை. செந்தில் பாலாஜி மீது முதன்முதலாக ஊழல் குற்றச்சாட்டு சொன்னதே, அன்றைய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தான்.
இன்றைக்கு அவர்தான், செந்தில்பாலாஜியை காப்பாற்ற முயற்சி செய்கிறார். ஒரு கைதியாக இருப்பவர் எப்படி அமைச்சராக இருப்பார் என்பதுதான் எங்களது கேள்வி. அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்க வேண்டும்.
ஓ.பன்னீர்செல்வம்
அ.தி.மு.க.வில் இதுவரை ஒரு கோடியே 35 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து இருக்கிறோம். அனைவரும் ஆர்வமாக வந்து அ.தி.மு.க.வில் இணைகிறார்கள். அந்த அளவுக்கு மக்களிடையே அ.தி.மு.க. பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இன்னும் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். அந்த இலக்கையும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எட்டுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க.வின், பி டீமாக செயல்பட்டு வருகிறார்.
அவர் பா.ஜனதாவுடன் கூட்டணி ஆலோசனை நடத்துகிறாரா என்பதை அவரிடமும், பா.ஜனதாவிடமும் தான் கேட்க வேண்டும். எங்களை பொறுத்தவரையில் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர். அவரை பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பேட்டியின் போது முன்னாள் அமைச்சர் செம்மலை, சந்திரசேகர் எம்.பி., சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் மணி எம்.எல்.ஏ. உள்பட பலர் உடன் இருந்தனர்.