வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்ததற்காக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு தொடர முடியாது

வேட்புமனுவில் தகவல் மறைத்ததற்காக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோவாரண்டோ வழக்கு தொடர முடியாது என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வாதம் செய்துள்ளது.

Update: 2023-10-16 18:42 GMT

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம், ''தமிழ்நாடு சட்டசபைக்கு கடந்த 2021-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அப்போது, எடப்பாடி தொகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில், கல்வித்தகுதி, சொத்து விவரங்களை முழுமையாக தெரிவிக்காமல் மறைத்துள்ளார். எனவே, எந்த சட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ. மற்றும் எதிர்கட்சித் தலைவர் பதவியை வகிக்கிறார் என்று அவரிடம் விளக்கம் கேட்டு, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர் இதுவரை பெற்ற ஊதியத்தையும் திரும்ப பெறவேண்டும் என்று கூறியிருந்தார்.

அரசு எதிர்ப்பு

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ''கல்வித்தகுதி, சொத்து விவரங்களை மறைத்த குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி தரப்பில் மறுக்கவில்லை. வேட்புமனுவில் உண்மை தகவல்களை மறைத்துள்ளதால் கோவாரண்டோ மனு தாக்கல் செய்யலாம். அதில் எந்த தவறும் இல்லை'' என்று வாதிடப்பட்டது.

அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், ''இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தால், அதுகுறித்து தேர்தல் வழக்குத்தான் தொடர முடியுமே தவிர, தகுதி இழப்பு செய்ய வேண்டும் என்று கோவாரண்டோ வழக்கு தொடர முடியாது'' என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

ஆனால், சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள தீர்ப்புகளின்படி, கோவாரண்டோ வழக்கு தொடர முடியும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள அந்த தீர்ப்புகளை தாக்கல் செய்யும்படி மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற நவம்பர் 3-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்