அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆக வேண்டும்
அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமையாக முன்னாள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்று ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கவுந்தப்பாடி:
அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமையாக முன்னாள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்று ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழு கூட்டம்
ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. இல்லத்தில் நடந்தது. கூட்டத்தில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கட்சியை வளர்க்க முடியவில்லை
எம்.ஜி.ஆரால் ஆரம்பிக்கப்பட்டு கட்டி, காத்து வளர்க்கப்பட்டு, ஒன்றரை கோடி தொண்டர்களை கட்சியில் இணைத்து உலகமே பாராட்டக்கூடிய இயக்கமாக அ.தி.மு.க.வை ஜெயலலிதா வளர்த்தார். அவருடைய மறைவுக்கு பின் கடந்த 4½ ஆண்டுகளாக கட்சிக்கும், ஆட்சிக்கும் நல்ல பெயரை ஏற்படுத்திக்கொடுத்து உலகத்தில் வாழும் தமிழர்கள் பாராட்டும் வகையில் நல்ல முறையில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தினார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வென்று எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், துணை முதல்- அமைச்சராக இருந்தார். தற்போது எதிர்க்கட்சி துணை தலைவராக இருக்கிறார். எனினும் எடப்பாடி பழனிசாமி போன்று ஓ.பன்னீர்செல்வத்தால் கட்சியை வளர்க்க முடியவில்லை. இதனால் கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை என்று குரல் எழுந்து உள்ளது. அடிப்படை உறுப்பினர்கள் முதல் பொறுப்பாளர்கள் வரை ஒற்றை தலைமை வேண்டும் என்று எல்லோரும் ஆதரித்து வருகின்றனர்.
ஒற்றை தலைமை
இதனால் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்றும், அதுவும் எடப்பாடி பழனிசாமி தான் பொதுச்செயலாளராக வரவேண்டும் என்றும் முழுமனதோடு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். எனவே ஓ.பன்னீர் செல்வம், நீதிமன்றம் சென்றால், அதை எடப்பாடி பழனிசாமி பார்த்து கொள்வார். எங்கள் உணர்வுகள் எல்லாம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றை தலைமை தான் என தீர்மானமாக நிறைவேற்றி இருக்கிறோம் என்றும், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கட்சி தலைமைக்கு அனுப்ப உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் பெருந்துறை எஸ்.ஜெயக்குமார் எம்.எல்.ஏ., ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் உமா, முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுதுரை, மாவட்ட இணைச்செயலாளர் மைனாவதி, துணைச்செயலாளர்கள் கவிதா, வாசு, பொருளாளர் மணி மற்றும் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர், பேரூராட்சி செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.