எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மோதலில் பா.ஜ.க. சமரசமா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்

ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில், அ.தி.மு.க. மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் கலந்துகொண்டு பேசுகிறார்.

Update: 2022-06-25 23:57 GMT

அதில் தற்போது நிலவி வரும் அ.தி.மு.க. உட்கட்சி பிரச்சினைகள் குறித்து விவாதித்துள்ளார். கட்சியில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்தும், பொதுக்குழுவில் கட்சியின் உயரிய பதவியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை திட்டமிட்டு அவமானப்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து, அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்து பேசுகையில், பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து கோஷம் எழுப்பியதும், அவர் மீது தண்ணீர் பாட்டில்களை வீசியதும் மூத்த நிர்வாகிகளுக்கு தெரியாமலே தொண்டர்களின் உணர்ச்சி மிகுதியால் நடந்து விட்டதாக கூறினார். மேலும் அவர் பேசும்போது, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பாதை மாறி போவதாகவும், அவரால் கட்சியை உடைக்கவோ, இரட்டை இலை சின்னத்தை முடக்கவோ முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும், அவருக்கு தொண்டர்களின் ஆதரவு இருக்கிறது என்றால் பொதுக்குழுவில் மோதி பார்க்க வேண்டியதுதானே என்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு சவால் விடுத்த அவர், கட்சி முழுவதுமே எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் தான் இருப்பதாகவும் கூறியுள்ளார்.




தற்போதைய அ.தி.மு.க. உள்கட்சி பிரச்சினையில் பா.ஜ.க. சமரசத்தில் ஈடுபடுமா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாகவும், இதை நாங்களே பார்த்து கொள்வோம் என்று கூறிய அவர், வரும் காலங்களில் அ.தி.மு.க.வை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்றும் உறுதிப்பட கூறினார்.

மேலும் ஓ.பி.எஸ்.சின் திடீர் டெல்லி பயணம், தேர்தல் கமிஷனில் முறையீடு? அடுத்த மாதம் மீண்டும் பொதுக்குழு நடக்குமா? என்பன உள்பட நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜசேகரின் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்