தனியார் நிதி நிறுவன சீலை உடைத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு
வந்தவாசியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தின் சீலை உடைத்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர். இதில் பணத்தை கட்டி ஏமாற்றமடைந்த பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வந்தவாசி
வந்தவாசியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தின் சீலை உடைத்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர். இதில் பணத்தை கட்டி ஏமாற்றமடைந்த பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தலைமறைவு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை தலைமையிடமாக கொண்டு வி.ஆர்.எஸ். நிதி நிறுவனத்தை உரிமையாளர் சம்சு மொய்தீன் என்பவர் நடத்தி வந்தார்.
வந்தவாசி, வாலாஜா, செஞ்சி, ஆரணி, உத்திரமேரூர், காஞ்சீபுரம், வெம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீபாவளி மற்றும் பொங்கல் சீட்டு நடத்தி, தங்க நகை, வெள்ளி பொருட்கள், மளிகை பொருட்கள்,
சீர்வரிசை பொருட்கள் உள்ளிட்ட கவர்ச்சிகரமான பொருட்கள் தருவதாக கூறி ஆயிரக்கணக்கான மக்களிடம் மாதந்தோறும் ரூ. ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலும், ஒரே தவணையாக ரூ.3 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரையிலும் பல கோடி ரூபாய் பணத்தை வசூல் செய்தனர்.
பின்னர் தீபாவளி மற்றும் பொங்கல் நேரங்களில் குறிப்பிட்ட காலத்திற்குள் எந்தவித திட்டத்திற்கும் பணத்தைக் கட்டியவர்களுக்கு திருப்பி தராமல் சம்சு மொய்தீன் மற்றும் உறவினர்கள் திடீரென தலைமறைவாகி விட்டனர்.
இதில் பணம் கட்டி பாதிக்கப்பட்ட மக்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும், 1000-க்கும் மேற்பட்டோர். திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.
போலீசார் ஆய்வு
இதையடுத்து வந்தவாசியில் உள்ள வி.ஆர்.எஸ். நிதி நிறுவனம் மற்றும் சூப்பர் மார்க்கெட், உறவினர்களின் வீடுகளை போலீசார் சீல் வைத்தனர்.
இந்த நிலையில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் மூடி சீல் வைக்கப்பட்ட வி.ஆர்.எஸ். நிதி நிறுவன சூப்பர் மார்க்கெட்டை வெல்டிங் எந்திரம் மூலம் திறந்தனர்.
பின்னர் உள்ளே சென்று கணினி மென்பொருள் மற்றும் ரசீதுகளை ஆய்வு செய்தனர்.
பொதுமக்கள் திரண்டனர்
இதனால் வி.ஆர்.எஸ். நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாற்றமடைந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
பொதுமக்களை வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தலைமையிலான போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் போலீசார் நிதிநிறுவனத்தில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.